பிறப்பின் ஒரு துளி
முனை எயில் ஆரம்
முக்குவிழ் கவிந்து
நிதம் சேரும் ஒளி
மஞ்சளின் புலனாய்
உண்டும் உயிர்த்தும்
தொகுத்தாளும்
திரைகாணா தளிரென
சொக்கும் புவியில்
சொர்ணச் சித்திரமாய்
மையம் புனைந்து
தவழும் வெப்பமும்
அனல் மாறித் தணியும்
ஈர்க்கும் வேதியாகமம்
விண்மீன் என
பெயரிட்டு துணைசேர
நால்திசையும் கடைந்து
ஓங்கும் வானுயர
கல் மண் புல் பூ கனி
என்று குறைமாறா
உருவத்து குணமதில்
செறிந்து தகைய
//////////
நேசத்தின் சிறுகொடி
நேசத்தின் ஆழத்தில்
மூழ்கித் திளைத்து
இனியும் மிச்சமிருக்கும்
நினைவுகளில் பூ மலர்ந்து
உள் வளைந்து தண்டின்
சுகமாய் பூரித்து காய்த்து
காம்பில் ஊறும் தேனின்
இன்சுவை பெருகித் தழைத்து
நுண் அணுக்களில் சேகரித்து
இமை தாழும் போழ்தினில்
வெதும்பும் காயத்தின்
கணப்பில் கிடந்து உருகும்
தண்ணென்ற கனியின்
உவர்ப்பினிதாய் மொய்த்து
புகலுறும் வண்டின் படபடப்பில்
மெய்யென்றும் மூச்சென்றும்
ஏதுமிலா பருவத்து நாணலாய்
இடறும் சிறுகொடி