தெலங்கானா மாநிலத்தின் காமாரெட்டி மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடை ஒன்றில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது, நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசிக்கான மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானிய பங்கு என்ன என்று மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுள்ளார். அதற்கு, இதுகுறித்து தனக்குத் தெரியாது என்று அவர் கூறவும் கடிந்துக்கொண்ட நிதியமைச்சர் 30 நிமிடத்தில் நியாயவிலைக் கடைகள் குறித்து விவரங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும், மக்களுக்கு ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் அரிசிக்கான மானியத்தில் மாநில அரசை விட மத்திய அரசே அதிக மானியம் வழங்கும் நிலையில், நியாயவிலைக் கடைகளில் ஏன் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் வைக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு மாநிலத்தின் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட மத்திய அமைச்சருக்கு அதிகாரம் இல்லை என்று கடும் கண்டனங்கள் எழுதுள்ள நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.