தமிழகம் முழுவதும் பொதுத்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேர்வதற்கு கலந்தாய்வு மூலம் தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. நீட் மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொறியியல் கலந்தாய்வுக்கான தேதிகளும் அறிவிப்பட்டுள்ளன. முன்னதாக, தமிழகம் முழுவதிலிருக்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளான அரசு, அரசு நிதியுதவி மற்றும் சுயநிதி கல்லூரிகளில் கலந்தாய்வு நடந்து முடிந்து முதலாமாண்டு மாணவர்களும் கல்லூரிகளுக்கு செல்லத்தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், நீட் தேர்வு காரணமாக மருத்துவ கல்லூரிகளிலும், பொறியியல் படிப்புகளின் மீதான ஆர்வமின்மை காரணமாக கலை மற்றும் அறிவியல் படிப்புகளின் மீதான ஈர்ப்பு தற்போதைய மாணவர்களுக்கு அதிகரித்துள்ளது. எனவே இதில் கவனம் செலுத்தியுள்ள அரசு, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்துள்ளது. மேலும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில் 15%, சுயநிதி கல்லூரிகளில் 10% கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் அரசு இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.