இந்தியா முழுவதும் பல இடங்களில் சமீப காலமாகவே அமலாக்கத்துறையின் சோதனைகளும், விசாரணை சம்மன்களும் அதிகரித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் சோனியா, ராகுல் காந்தி தொடங்கி ஒவ்வொரு அரசியல் மற்றும் தொழில் நிறுவனங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அந்த வரிசையில், மேற்கு வங்காளத்தின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜி நிலக்கரி ஊழல் வழக்கில் நேரில் ஆஜராகக் கோரி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதையடுத்து, சம்மனில் குறிப்பிட்டுள்ளதைப் போல கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் செப்டம்பர் 2ஆம் தேதி அவர் ஆஜராவார் என எதிர்ப்பாக்கப்படுகிறது. அண்மை காலமாக எதிர்க்கட்சிகள் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ சோதனைகளை மத்திய பாஜக அரசு வேண்டுமென்றே தூண்டி விடுவதாக சர்ச்சைகள் எழும்பத்தொடங்கியுள்ள நிலையில் தற்போது அபிஷேக் பானர்ஜிக்கும் ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.