சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நீர்ச்சத்து நிறைந்த பொருட்களை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் தாகம் ஏற்படும் போது நீர்ச்சத்து நிறைந்த பானங்களைப் பருகுவது மிகவும் அவசியமானது. ஏனென்றால், வெயில் காலத்தில் நம் உடலில் இருந்து நீர்ச்சத்து அதிக அளவில் வெளியேறும். அதனை ஈடுகட்ட அதிக அளவு திரவ உணவுகள், பழரசங்கள், குளிர்பானங்கள் இவற்றை எடுத்துக்கொண்டு நீர்ச்சத்தைச் சமநிலைப்படுத்த வேண்டும்.
இதற்காக நீங்கள் செலவு செய்து குளிர்பானக் கடைகளுக்குச் சென்று குளிர்பானங்களை வாங்கி அருந்த வேண்டிய அவசியமில்லை. உங்கள் வீட்டில் உங்கள் கைப்பக்குவத்தில் அசத்தலாக குளிர்பானங்களை நீங்களே செய்து உங்கள் குடும்பத்தாரோடு குடிப்பதின் மூலம் உடல் ஆரோக்கியமாவதோடு கூடுதலாக செலவு செய்யும் பணமும் மிச்சமாகும்.
பொதுவாக வயதான அனைவருக்குமே கடுமையான வெயிலினால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படுவது சகஜம்தான். இதனைத் தவிர்ப்பதற்கு மிகவும் சிறந்த பொருள் எலுமிச்சை, இஞ்சி, தேன். எனவே, முதலில் எலுமிச்சையைக் கொண்டு மூன்றுவிதக் குளிர்பானங்களை எப்படித் தயாரிக் கலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.
எலுமிச்சை
நன்னாரி சர்பத்
சாதாரணமாக நாம் தயாரிக்கும் எலுமிச்சை சர்ப்பத்துடன் நன்னாரி வேர் அல்லது நன்னாரி எசன்ஸ் கலந்து குடிப்பதன் மூலம் உடல் சூடு அடியோடு குறையும். சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும்.
புதினா, எலுமிச்சை சர்பத்
அரைமூடி எலுமிச்சை சாறு, சர்க்கரை, தேவையான அளவு நீர் இவற்றுடன் நான்கைந்து புதினா இலைகளைச் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அடித்து எடுத்தால் புதினா எலுமிச்சை சர்பத் தயார். இதனை வடிகட்ட வேண்டும். மேலும், சர்க்கரைக்குப் பதிலாக பனங் கற்கண்டு அல்லது பனைவெல்லம் பயன்படுத்தும்போது உடல் உஷ்ணம் குறைவதோடு வெயிலினால் ஏற்படக்கூடிய சோர்வு மற்றும் பிற வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.
எலுமிச்சை, இஞ்சி சர்பத்
அரைமூடி எலுமிச்சை, இரண்டு மூன்று துண்டுகள் இஞ்சியைப் போட்டு மிக்ஸியில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு அடித்தபின் வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனோடு சர்க்கரை அல்லது தேன் கலந்து குடிக்க வேண்டும். தலைச்சுற்றல், மயக்கம், வாந்தி வருதல் போன்ற அனைத்துப் பிரச்சினைகளையும் நீக்கக் கூடிய சக்தி இந்த சர்பத்திற்கு உள்ளது. குழந்தைகள் முதல் வயதானவர்கள்வரை தினமும் ஒரு வேளை வெயில் காலம் முழுவதும் இதைக் குடித்து வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.
இளநீர்
இயற்கையில் கிடைக்கக்கூடிய இளநீரை வெயில் காலத்தில் பருகுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை அளிக்கக் கூடியது. இளநீருடன் சிறிதளவு உப்பு, எலுமிச்சை இரண்டையும் கலந்து குடித்துவந்தால் உடலில் ஏற்படக் கூடிய நீர்ச்சத்து பற்றாக்குறையை எளிதில் ஈடுகட்ட கூடிய ஆற்றல் இதற்கு உண்டு. மேலும், இளநீரில் உள்ள வழுக்கையை வீணாக்காமல் அதைத் தோண்டி எடுத்து மிக்ஸியில் போட்டு அதனுடன் இளநீரையும் சேர்த்து சிறிது தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளுங்கள். இதனை ஃப்ரிஜ்ஜில் வைத்து விட்டு மதிய நேரங்களில் வெயில் சுட்டெரிக்கும்போது பருகினால் குளுகுளுவென்று இருக்கும். இதனைச் சிறு குழந்தைகளுக்குப் பழக்கிவிட்டால் அவர்கள் ஐஸ்கிரீமுக்குக்கூட டாட்டா சொல்லிவிடுவார்கள்.
திராட்சை
பொதுவாகக் கடைகளில் கிடைக்கும் விதையில்லாத் திராட்சை களைப் பயன்படுத்துவதைவிட விதையுள்ள பன்னீர் திராட்சையை வாங்கி நன்கு கழுவிய பின் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து தேவையான நீருடன் கலந்துகொள்ளுங்கள். இதை வடிகட்டி ஃபிரிஜ்ஜில் வைத்துப் பருக வேண்டும். இந்தப் பானத்தை ஒரு மணி நேரத்துக்குள் குடித்துவிடுவது மிகவும் சிறப்பானது. இதனைப் பருகுவதன்மூலம் இரவு நேரத்தில் நல்ல உறக்கம் ஏற்படுவதுடன் உடலில் உள்ள நச்சுக்களும் வெளியேற்றப்படும். மேலும், உடல் புத்துணர்வுடனும், சருமம் மினுமினுப்பாகவும் இருக்கத் திராட்சைரசம் பருகுவது மிகவும் நல்லது.
ஐஸ் மோர் வெள்ளரி
வெள்ளரிக்காயைப் பொடிப்பொடியாக நறுக்கி மோரில் போட்டுக் கொள்ள வேண்டும். இத்துடன் ஐஸ் கட்டிகளைப் போட்டுக்கொண்டு தேவையான அளவு உப்பையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த மோருடன் வெட்டிவேர், இஞ்சி, சிறிதளவு பச்சை மிளகாய் இவற்றையும் சேர்த்துக்கொண்டால் குடிப்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும். இதனைக் குடிப்பதால் உடல் குளிர்ச்சி அடைவதோடு அதிகப்படியான ஆற்றலும் கிடைக்கும். இதனை மண்பானையில் வைத்துக் குடித்தால் இன்னும் சிறப்பு.
முலாம் பழச்சாறு
கோடை வெயி லின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முலாம் பழச்சாறு போதும். இந்தப் பழத்தைக் கடை களிலிருந்து வாங்கி வந்து நன்கு சுத்தம் செய்து அதன் உள்பகுதியை நறுக்கி எடுத்து மிக்ஸியில் பால், சர்க்கரை விட்டு நன்கு அடித்துப் பின் ஃபிரிஜ்ஜில் வைத்துவிடுங்கள். தேவையானபோது எடுத்துக் குடிப்பதால் உடல் சூடு தணிந்து புத்துணர்வு பிறக்கும்.
மேற்கூறிய இந்தப் பானங்களை நீங்களே தயாரித்து உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொடுத்து வெயிலை விரட்டுங்கள். முடிந்தவரை நம் பகுதிகளில் விளையக்கூடிய பழங்களை வாங்கிப் பயன்படுத்துங்கள். அதேபோல் விதையுள்ள கனிகளை மட்டுமே வாங்கிப் பயன்படுத்துவதால் ஆரோக்கியத்தைப் பேண முடியும். அதை விடுத்து விதையில்லாப் பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் மலட்டுத்தன்மை நம்முள் விதைக்கப்படுகிறது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.