எதோ ஒரு நினைவில்
செல்போன் நோண்டிக்கொண்டு இருக்கிறீர்கள்…
அருகில் இருக்கும்
தோழிகாதலி மனைவி யாரோ ஒருவளின்,
அவள் மிக உன்னதமாக நேசித்த காதலித்த
அந்த மனிதனை பற்றிப் பேச நேர்ந்தால்…
உயிர் வலியின் வெப்பச் சூடு தகிக்கும்
தார்ச்சாலையில் நெளியும்
பாம்பின் வேதனையை உணர்வீர்கள்தானே ?
கண்கள் விரித்து
ஆன்மா வழியும் ஒரு உன்னதத்தை
நேசிப்பின் கடைசி மிடறை
அவர்கள் விரல்கள் உரசிக்கொண்ட
அந்த மாபெரும் காவியத்தை
உயிர் வலியுடன் அவள் உரையாடும்போது
உங்கள் உயிர் வலி
மிக மெதுவாகப் பிரியும்தானே?
அவளின் அந்தக் காலங்களில்
நீங்கள் எங்கோ ஒருத்தியை
நேசித்துக்கொண்டு இருக்கலாம்தான்
நண்பர்களுடன் தினந்தோறும்
மதுவிடுதிகளின் உச்சத்தில்
தனிமையின் ஆகச் சிறந்த ஓய்வில்
வசந்தத்தைப் புறந்தள்ளும்
இலையுதிர் காலத்தின் வேதனையை
இவை எதுவுமற்ற அவளை மட்டும் தேடிக்கொண்டு…
இருவரின் எதிர்காலத்தின் ரகசியங்களை
ஒரு ரூபாய் காயின்கள்
கரைந்துகொண்டு இருக்கும்
டெலிபோன் பூத்தின் ரகசியத்தை
உங்களுக்குத் தெரியும் பொருட்டு
அந்த வசந்த காலத்தின்
இளம் பச்சை நிறத்தின்
ஓர் இலையில் நீங்கள் இருந்திருக்கக்கூடும்
பின் நோக்கி நகரும் டைம் டிராவலின்
மாபெரும் அற்புதம் அது
நில்!
இப்போது அவள் விரல் பற்ற வேண்டாம்
வேறொருவன் அருகில் இருக்கிறான்
இன்னும் அவளைப் பேசவிடு..
தவிர்க்கவே முடியாத அந்தக் காலத்தின்
வேறு ஒரு நபராக நீங்கள் இருக்கிறீர்கள்
முகங்கள் மங்கி நினைவுகளில்
மையச் சரடுகளாக அந்த ரகசியம் உங்களுக்கே
எங்கு இருப்பான், யாரை மணந்திருப்பான்,
இவள் என்னிடம் சொல்லிய இரவில்
அவன் என்ன செய்துகொண்டு இருப்பான்…
அவன் நினைவின் இடுக்களில்
இவள் எங்கு மறைந்திருப்பாள்?
அதைத் திறக்கும் கற்சாவி எது?
என்னிடம் என்னவள் சொன்னதுபோல,
அவன் மனைவியிடம்
என்றாவது ஒரு நாள் பேசியிருப்பானா?
பெண் அதி அற்புதம்..
அவள் நேசிக்கும் ஒருவன் மிகச் சிறந்தவன் என்று
ஒரு ஆண் நினைப்பதே இல்லை!
இதோ இதை எழுதிக்கொண்டு இருக்கும் நான்
எப்போதும் ஒரு பார்வையாளன்தானே என்பதை
அவளிடம் எப்படிச் சொல்வது!
பெண்களால் நேசிக்கவியலா
ஒரு ஆணை என்ன செய்ய?
பாம்புகள் குடியிருக்கும் அந்த வனாந்திரத்தில்
அவனைத் தூக்கி எறிந்து
அவனைக் கொத்தும் காட்சியைப் பார்க்க
சகியாமல் நாம் நகர வேண்டும்
விஷ போதையில் அவன் வாழட்டும்
பின் ஒரு நாளில் பிறக்கும்போதாவது
அவள் அவனை நேசிக்கட்டும்
ஆமென்