தமிழகத்தில் உள்ள 13 பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் பெற்றிருந்தார். இந்த நிலையில், துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசை ஆளுநர் கலந்தாலோசிப்பதில்லை என்பதால் ‘தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும், தேவைப்பட்டால் துணைவேந்தரை நீக்கம் செய்யும் இறுதி முடிவை மாநில அரசே மேற்கொள்ளும் என்ற 2 மசோதாக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்த இரு மசோதாக்களும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், துணைவேந்தர்களை அரசே நியமிப்பது பல்கலைக்கழக மானியக்குழு சட்டத்துக்கு புறம்பானது. அரசியல் தலையீட்டுக்கு வழிவகுக்கிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.