டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில், மதுபான உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் டெல்லி துணை முதலமைச்சராக உள்ள மணீஷ் சிசோடியா வீடு உள்பட அவருக்கு சொந்தமான மற்றும் சம்பந்தம் உள்ள சுமார் 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து, சிபிஐ சோதனைக்கு டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சௌகதா ராய், ‘பாஜகவுக்கு இரண்டு கைகள் உள்ளன. ஒன்று சிபிஐ, மற்றொன்று அமலாக்கத்துறை. மேற்குவங்கத்திலும் மகாராஷ்டிரத்திலும் அவர்கள் இதைத் தான் செய்தார்கள். பாஜக எதிர்க்கட்சிகளை ஒடுக்கப் பயன்படுத்தும் உத்தி இது. வழக்கம்போல ரெய்டில் எதுவும் கிடைக்காது என்று கூறியுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.