ஆசிரியர் என்பவர் தம் மாணவர்களுக்குப் பள்ளிப் பாடங்களைக் கற்றுக்கொடுப்பவர் மட்டுமல்ல; அவர்களுக்கு ஏதாவது இடர் ஏற்பட்டால் அதைக் களைபவரும்கூட. அப்படியான ஆசிரியர்கள்தாம் சமுதாயத்தின் தேவை. அப்படியொரு புரிதலைக்கொண்ட ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்திக்கொண்டிருந்த வேளையில் எரிவாயு கசிந்த மணத்தை உணர்கிறார். யோசிக்கக்கூட அவகாசமில்லாதபோதிலும் துரிதமாக முடிவெடுத்து மாணவர்களை அங்கி ருந்து விரைந்து அப்புறப்படுத்துகிறார். அடுத்த சில நிமிடங்களில் அங்கே பெருஞ்சத்தத்துடன் வெடி விபத்து ஏற்படுகிறது. தனக்குப் பாதிப்பு என்றபோதும், பாடம் கற்றுக்கொண்டிருந்த மாணவர்கள் 26 பேரைக் காப்பாற்றிவிடுகிறார் அந்த ஆசிரியர். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரையடுத்த புலிவலம் அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் முல்லைதான் அவர். முல்லை டீச்சர் என அன்பாக அழைக்கப்படும் அவரை, தன் உயிரைப் பொருட்படுத்தாமல் மாணவர்களைக் காப்பாற்றிய, அரிய பணிக்காக ஜனவரி 26 குடியரசு நாளன்று தமிழக முதல்வர் விருது வழங்கிக் கௌரவப்படுத்தியிருக்கிறார். அவரிடம் நடத்திய நேர்காணலிலிருந்து…
பொதுவாக, ஆசிரியர் பணியில் நல்ல சம்பளம், தொந்தரவு அற்ற வேலை என்ற புரிதல் இருக்கிறது. அப்படியான காரணங்களுக்காக நீங்கள் ஆசிரியர் துறையைத் தேர்ந்தெடுத்தீர்களா? வேறு ஏதாவது தனிப்பட்ட காரணம் உண்டா?
என்னுடைய தந்தை தமிழாசிரியர். என்னுடைய அம்மாவும் என்னிடம் நீ டீச்சராகணும், டீச்சராகணும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். சின்ன வயதில் இருந்தே அதைத் தொடர்ந்து கேட்டுக் கேட்டே வளர்ந்ததால் அது என் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அதுமட்டுமல்ல; என்னுடைய மாமியாரும் ஆசிரியர்தான். எனது பள்ளி ஆசிரியரும் அவரே. அவர்தான் என்னுடைய ரோல்மாடல். எனக்குப் பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களைப் போக்க நான் நாடியதும் அவரைத்தான். அதனால் அவரைப் பார்க்கும்போதெல்லாம், அவர் பாடம் நடத்திய விதம், மாணவர்களை அவர் நடத்திய தன்மை எல்லாம் சேர்ந்து என்னுள் ஆசிரியர் பணிமீதான பேரார்வத்தை விதைத்துவிட்டது. ஆகவே, நானும் டீச்சராக வேண்டும் என்ற எண்ணத்திலேயே படிப்பைத் தொடர்ந்தேன்.
எப்போது ஆசிரியராகப் பணியேற்றீர்கள்?
ஆசிரியர் பணிக்கு வந்து ஏறக்குறைய 21 வருடங்களாகிவிட்டன. தற்போது 10ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடம் நடத்துகிறேன்.
பள்ளி மாணவர்களைக் காப்பாற்றிய அந்தச் சம்பவத்தின்போது என்ன நடந்தது?
அப்போது, பள்ளி மாணவர்களை அழைத்துவந்து பள்ளிப் பரிமாற்ற நிகழ்வு நடத்துவதற்காகத் தயாராகிக்கொண்டிருந்தோம். அதற்காக ஒரு நாள் முழுவதும் ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தோம். அதுகுறித்தான பாடத்தை நடத்திக்கொண்டிருந்தோம். பள்ளியில் மொத்தமே ஐந்து வகுப்பறைகள்தாம் உண்டு. அதில் ஒரு வகுப்பறையை ‘ஸ்மார்ட் கிளா’ஸாக மாற்றியிருந்தோம். ஆகவே, பெரும்பாலும் வகுப்பை வெளியில் வைத்துத்தான் நடத்துவோம். அன்றைக்கும் அப்படித்தான் மாணவர்கள் ஆங்காங்கே இருக்க பாடம் நடத்திக்கொண்டிருந்தோம். சிலர் மரத்தடியில் அமர்ந்திருந் தனர். அந்த நேரத்தில் காற்றில் ஒருமாதிரியான புகை வாடை வந்தது. வீட்டில் எரிவாயு தீரப்போகும் நேரத்தில் எழும் வாடையை ஒத்திருந்தது அது. சட்டென்று எனக்கு ஏதோ அசம்பாவிதமான உணர்வு எழுந்தது. உடனே சுதாரித்துக்கொண்டு எரிவாயு வாடைதான் அது என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு மாணவர்களை எங்களால் இயன்ற அளவு விரைவாக வெளியில் அனுப்பிவைத்தோம். அனைவரும் வெளியேறுவதற்குள் அந்த அசம்பாவிதம் நடந்துவிட்டது. பெரிய வெடிச் சத்தம் கேட்டது. வெடி விபத்தின் காரணமாக அருகிலிருந்து வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து என்மீது சரிந்துவிழுந்தது. அதிலிருந்து என்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியாமல் போய்விட்டது. அதில் சிலருக்குக் காயம் ஏற்பட்டது. மாணவர்கள் சிலருக்கும் காயங்கள் ஏற்பட்டிருந்தன.
எவ்வளவு நாட்கள் சிகிச்சையில் இருந்தீர்கள்? அந்த நாட்களை எப்படிக் கழித்தீர்கள்?
சிகிச்சை என்று ஒரு சொல்லில் சொல்லிவிட்டாலும், உண்மையில் சிகிச்சை முடிந்து நான் பள்ளிக்கு வர ஒரு வருடம் ஆகிவிட்டது. அது கொரோனா பரவலால் பொது முடக்கம் அமலாகத் தொடங்கிய காலம். நான் சிகிச்சையில் இருந்தபோது, மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் செல்போனிலோ வாட்ஸ் அப் வழியாகவோ பேசுவார்கள். தினசரி குறைந்தபட்சம் யாராவது ஒருவர் பேசிவிடுவார்கள். அதுதான் எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.
எத்தனை மாணவர்கள் அன்று அங்கே இருந்தார்கள்? அவர்களை எப்படிக் காப்பாற்றினீர்கள்?
ஐந்து குழுக்களாக மாணவர்கள் அமர்ந்திருந்தனர். அன்று வந்திருந்தவர்களில் 26 மாணவர்களைக் காப்பாற்றியிருந்தேன். 3 குழந்தைகள் மீது விபத்தின் காரணமாக தெறித்து விழுந்த செங்கல் பட்டு காயம் ஏற்பட்டிருந்தது. தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பிற ஆசிரியர்கள்தான் முதலுதவிகளைச் செய்திருக்கிறார்கள். எனக்குக் காயம்பட்டதால் என்னை மருத்துவமனையில் சேர்ப்பதற்காகத் தலைமை ஆசிரியர் என்னை அழைத்து வந்துவிட்டார்.
மாணவர்களைக் காப்பாற்றுவதில் வேறு யாராவது உங்களுக்கு உதவினார்களா?
நாங்கள் ஓரிருவர்தான் மரத்தடியில் வகுப்பை நடத்திக்கொண்டிருந்தோம். மற்றவர்கள் எல்லாரும் வகுப்பறையில் இருந்தனர். இந்தச் சம்பவம் நடந்தபோது எனது கவனம் எல்லா மாணவர்களையும் பத்திரமாக அனுப்பிவைக்க வேண்டும் என்பதில்தான் இருந்தது. ஆகவே, மாணவர்களை வெளியில் அனுப்பிவைத்துக் கொண்டிருந்தேன். அது எனக்கு ஞாபகம் இருக்கிறது. அதன் பின்னர் தலைமை ஆசிரியர் முதற்கொண்டு எல்லா ஆசிரியர்களும் உதவிக்கு ஓடி வந்துவிட்டார்கள்.
உங்கள்மீது சுவர் விழுந்ததால் என்னமாதிரியான பாதிப்புகள் உங்களுக்கு ஏற்பட்டன?
கால் எலும்பிலும் இடுப்பு எலும்பிலும் முறிவு ஏற்பட்டுவிட்டது. மேலும், உடலில் சில இடங்களில் காயங்கள் ஏற்பட்டன. எனக்கு மொத்தம் 11 ஆபரேஷன் செய்தார்கள். அவற்றில் எட்டு ஆபரேஷன் மேஜரானது. 3 ஆபரேஷன் சிறிய அளவிலானது.
இந்த சம்பவத்தை உங்களது குடும்பத்தினர் எப்படி எடுத்துக்கொண்டனர்?
எனக்கு ஏற்பட்ட பாதிப்பு அவர்களுக்கு வருத்தத்தை அளித்திருந்தபோதிலும் மாணவர்களைக் காப்பாற்றும்போதுதான் அது நடந்தது என்பதால் அவர்களுக்கும் அது ஏதோ ஒருவகையில் நெகிழ்ச்சியாக இருந்ததாகக் கூறினார்கள். ஆகவே, எனது குடும்பத்தினர் மிகவும் உதவியாகத்தான் இருந்தார்கள். என் கணவர் தனியார் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார். எனக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவர் திருவண்ணாமலையில் மருத்துவம் படிக்கிறார். மற்றொருவர் புவனேஸ்வரில் ஐஐகூயில் M.கூஞுஞிட படிக்கிறார். எனது மாமியார் எங்களுக்கு முழு ஆதரவாக இருந்தார். அவருக்கு என்னைப் பற்றி நன்கு தொியும். நிறைய நேரத்தைப் பள்ளிக்காகவே செலவிடுவேன் என்பதை அறிந்திருந்தார். சிகிச்சையில் இருந்த வேளையில் சிலநேரம் அந்தச் சம்பவத்தை நினைத்தால் அழுகை வந்துவிடும். நான் இன்னும் கூடுதல் கவனத்துடன் இருந்திருக்கலாமோ என்று எண்ணி வருந்தியிருக்கிறேன். அப்போது எனது மாமியாரும் குடும்பத்தினரும் எனக்கு ஆறுதல் சொல்வார்கள். தலைமை ஆசிரியரும் நேரம் கிடைக்கும்போது என்னை வந்து பார்த்து எனக்கு ஆறுதல் சொல்வார். என்னால் மீண்டும் எழுந்து நடக்க முடியுமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. இனிவரும் நாள்களில் இன்னொருவர் தயவில்தான் வாழ வேண்டுமோ என்றுகூடப் பயந்திருக்கிறேன். இத்தனை குழந்தைகளைக் காப்பாற்றி உள்ளீர்கள். அந்தக் குழந்தைகளின் அவர்களுடைய பெற்றோர்களின் வாழ்த்துகள் கண்டிப்பாக உங்களைக் காப்பாற்றும், கண்டிப்பாக நீங்கள் எழுந்து நடப்பீர்கள், கவலைப்படாதீர்கள் என்று தைரியம் தந்தார்கள்.
எழுந்து நடப்பதற்கு என்ன மாதிரியான உதவிகள் அளித்தார்கள்?
பிசியோதெரபி சிகிச்சை மூலம் கொஞ்சம் கொஞ்சமாக நடக்க வைத்தார்கள். மருத்துவமனையில் ‘ஷூ’ ஒன்று கொடுத்திருக்கிறார்கள். அதைப் போட்டால்தான் நடக்க முடிகிறது. வெறும்காலில் நடக்க முடியவில்லை. ஷூ போட்டால் குறைந்தது 10 அடியில் இருந்து 15 அடி தூரம் வரை யாருடைய துணையும் இல்லாமல் நடக்கிறேன்.
மாணவர்கள் உங்களை வந்து பார்த்தார்களா?
எல்லா மாணவர்களும், அவர்களுடைய பெற்றோரும் மருத்துவமனையிலும், வீட்டிலும் வந்து பார்த்தார்கள். பெரும்பாலானவர்கள் நான் நல்லபடியாக குணமாக வேண்டும் என்று எனக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். அதையெல்லாம் பார்த்து எனது மகன்களுக்கு என்னை நினைத்து மகிழ்ச்சியே. சிறிது சிறிதாகக் குணமானேன். மறுபடியும் பள்ளிக்கு வந்து குழந்தைகளை எல்லாம் பார்த்தபோது எனக்கு என் வேதனைகள் எல்லாம் மறைந்துவிட்டன. மிகவும் சந்தோசமாக இருக்கிறேன். தற்போது 10ஆம் வகுப்புக்கு மட்டும் வகுப்பு எடுக்கிறேன்.
சிகிச்சை முடிந்து திரும்பவும் நீங்கள் பள்ளிக்குச் சென்றபோது எப்படி உணர்ந்தீர்கள்?
அந்த விபத்தில், என்னால் காப்பாற்றப்பட்ட மாணவர்கள் இப்போது 9ஆம் வகுப்பு படிக்கிறார்கள். அந்த மாணவர்களைப் பார்க்கும்போது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்போதும் மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பள்ளிக்கு வந்து என்னைப் பார்த்துச் செல்கின்றனர். கடவுள் மறுபடியும் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் என நினைத்து, எனது பணியில் திறம்படச் செயல்பட வேண்டும் என்று என்னை நானே ஊக்கப்படுத்திக்கொள்கிறேன்.
உங்களது செயலைப் பாராட்டி கிடைத்த விருதுகள் பற்றிச் சொல்லுங்கள்?
தமிழக அரசு சார்பில் வீர, தீர செயல் புரிந்தமைக்கான ’அண்ணா நினைவுப் பரிசு’ வழங்கினார்கள். அதுமட்டுமல்லாமல் எனக்கான மருத்துவச் செலவையும் அறுவை சிகிச்சைக்கான செலவையும் தமிழக அரசே ஏற்றுக்கொண்டது.
மறக்க முடியாத பாராட்டு என எதைச் சொல்வீர்கள்?
தமிழக அரசு கொடுத்ததே மிகச் சிறப்பானது. அதேபோல், அந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் என்னோடு ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளலாமா? என்று கேட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது; மறக்க முடியாத நிகழ்வாகவும் அது அமைந்தது.
கல்வித்துறை எப்படி இருக்கிறது. உள்கட்டமைப்பு சார்ந்து எந்த அளவுக்கு மாற்றம் நிகழ்ந்து உள்ளது என்று நினைக்கிறீர்கள்?
நான் படித்த காலத்தைவிட இன்றைய காலத்தில் அரசுப் பள்ளிகள் தரமானவையாகவே உள்ளன. அதேபோல, டெட் தேர்வெழுதி அதில் தேர்ச்சி பெற்றால்தான் ஆசிரியராகப் பணிபுரிய முடியும் என்ற நிலை வந்தபின்னர், தரமான (கிதச்டூடிஞூடிஞுஞீ) ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள்; கல்வியும் தரமாக இருக்கிறது. ஸ்மார்ட் கிளாஸ் என்பது நல்லபடியாக அமைந்துள்ளது. உள்கட்டமைப்பு பாராட்டுக்குரியதாக உள்ளது. கழிவறைகள் மிகவும் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது.
ஒரு மாணவரின் வாழ்க்கையில் டீச்சரின் பங்கு என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது?
நான் இந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறேன் என்றால், அதற்கு என்னுடைய ஆசிரியர்களே காரணம். அதேபோன்று என்னுடைய மாணவர்களுக்கும் என்னைப் போன்ற ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எங்களது காலத்தில் தகவல் தொடர்பு வசதி குறைவாகவே இருந்தது. டிவியே அரிதுதான். ஆனால், இன்றோ ஸ்மார்ட்ஃபோன் இல்லாத வீடே இல்லை. டாக்டா், இன்ஜினியர் மட்டும் சிறந்த துறை என்று எண்ண வேண்டாம். நமக்குப் பிடித்த துறையில் நமது திறமைகளை வளர்த்துக்கொண்டாலே போதும். எடுத்துக்காட்டாக, என்னுடைய மாணவன் சுபாஷ் என்பவன் சராசரியானவன்தான், ஆனால் அவனுக்கு இசையில் மிகவும் ஆர்வம் இருந்தது. அதுதொடர்பாக என்னிடம் வந்து கேட்டபோது, சென்னை மியூசிக் காலேஜ் பற்றிக் கூறினேன். அதில் போய்ச் சேர்ந்து படிக்கும்படி சொன்னேன். இன்று அந்த மாணவன் தமிழக அளவில் விருது பெற்று, மிகவும் உயர்ந்த நிலையில் இருக்கிறான். நான் அளித்த ஒரு சிறிய தகவல் அவனை ஊக்கப்படுத்தியுள்ளது. இந்த அளவுக்கு உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறான் என்பதை நினைக்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆகவே, ஓர் ஆசிரியர் என்பவர் மாணவர்களின் முன்னேற்றத்துக்கான தூண்டுகோலாக இருக்க வேண்டும். அந்த வகையில் ஆசிரியர் பணி மாணவர்களின் வாழ்வில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு கொண்டது. அதை உணர்ந்து ஆசிரியர்களும் பணியாற்ற வேண்டும்.
எதிர்கால ஆசை என ஏதாவது வைத்திருக்கிறீர்களா?
கடவுள் எனக்கு இன்னொரு வாழ்க்கை கொடுத்திருக்கிறார். ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லம் நடத்த வேண்டும் என்பது எனது ஆழ்மன விருப்பம். வாய்ப்புக் கிடைத்தால் குறைந்தது 25 குழந்தைகளையாவது வைத்து அப்படியோர் இல்லம் நடத்தி சேவையாற்ற வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். அதுதான் எனது நீண்டகால ஆசை.