உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தன் இரண்டாம் அலைத் தாக்குதலை இந்தியாவில் தொடங்கிவிட்டது. இந்தியா முழுவதும் ஒரே நாளில் மூன்று லட்சம்பேர் கொரோனா தொற்றுக்கு ஆளானதாக ஏப்ரல் 22 அன்று மத்திய சுகாதாரத் துறை அறிவித்தது. அதே நாளில் 2,104 பேர் இறந்ததாகவும் அறிவிப்பு வெளியானது. இந்த இரண்டு எண்ணிக்கையுமே இதுவரை காணாத உச்சம்.
தமிழகத்திலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் பத்தாயிரத்தைத் தாண்டுகிறது. மருத்துவக் கட்டமைப்புகள் ஓரளவுக்கு நல்லவிதத்தில் இருக்கும் தமிழகத்திலேயே இந்த நிலை என்றால், வட இந்திய மாநிலங்கள் நிலைமையைச் சமாளிக்க முடியாமல் திணறுகின்றன. போதுமான மருத்துவமனைகளும் மருத்துவ உபகரணங்களும் இல்லாமல் பலர் உயிரிழப்பது வேதனையானது.
கடந்த ஆண்டு அமெரிக்காவிலும் இத்தாலியிலும் கொரோனாவால் கொத்துக் கொத்தாக மடிந்தவர்களை ஒன்றாக அடக்கம் செய்த கொடுமையைக் கண்முன் நிறுத்துகின்றன வட மாநிலங்களில் நிகழும் அவலங்கள். கொரோனாவால் இறந்தவர்களைச் சாலையோரங்களில் எரிப்பதும், ஒரே இடத்தில் பல சடங்களை எரியூட்டுவதும் மனதைப் பதைக்கச் செய்கின்றன. சடலங்களை எரிப்பதற்கான விறகுக் கட்டைகளின் விலை மூன்று மடங்கு விற்கப்படுவதாக வெளியாகும் செய்திகள், நாம் எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்கிற கசப்புணர்வை ஏற்படுத்துகின்றன.
இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே கொரோனா இரண்டாம் அலை குறித்து எச்சரிக்கப்பட்டது. மத்திய அரசு அதைப் பெரிதாக எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. ஆரம்பத்திலேயே சுதாரித்து, தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருந்தால் நிலைமை இந்த அளவுக்கு மோசமடைந்திருக்காது. இவ்வளவு நெருக்கடிகளுக்கு நடுவிலும் ஐந்து மாநிலங்களில் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஏப்ரல் 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தமிழகத்தில் சொல்லப்பட்டது. தேர்தல் பிரச்சாரங்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்ததுதான் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கா? அப்போதெல்லாம் மக்கள் கூட்டத்தைக் கட்டுப் படுத்தாமல், இப்போது இரவு பத்து மணிக்கு மேல் ஊரடங்கை அமல்படுத்துவதால் என்ன பலன்?
ஹரித்துவாரில் பரவாதா?
இரண்டாம் அலையில் கொரோனா வைரஸ் மனிதர்களின் நுரையீரலுக்குள் நுழைந்த பிறகே அறிகுறிகள் வெளிப்படுகிறது என்று மருத்துவத் துறையினர் அபாய மணி ஒலித்தது நம் பிரதமரின் காதுகளில் விழவே இல்லை என்பதற்கு மேற்கு வங்க மாநிலத்தின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தைப் பார்த்து, இவ்வளவு கூட்டத்தை இங்கே பார்ப்பது பெருமிதமாக இருக்கிறது என்று கூறியது நினைவுகூறத்தக்கது. கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களால்தான் நாடு முழுவதும் கொரோனா பரவியதாகப் பரப்புரை செய்யப்பட்டது. இப்போது பல மாநிலங்களில் இருந்தும் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் ஹரித்துவாரில் குவிகிறார்களே, இதனால் கொரோனா பரவாதா?
குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ஹரியானா, சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள்தான் கொரோனா இரண்டாம் அலையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்திருக்கிறது. இவற்றில் வட இந்திய மாநிலங்களில் நிலைமை கைமீறிச் சென்றுகொண்டிருக்கிறது. மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், டெல்லி ஆகிய மூன்று மாநிலங்களிலும் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தவண்ணம் இருக்கிறது. பலரும் நுரையீரல் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் இடமில்லாமல் அவதிப்படுகிறார்கள். “இங்கிருக்கும் சில மருத்துவமனைகளில் இன்னும் சில நிமிடங்களுக்கே ஆக்ஸிஜன் இருக்கும். அதனால், போர்க்கால அடிப்படையில் ஆக்ஸிஜனை அனுப்ப வேண்டும்” என்று டெல்லி அரசு உயர்நீதிமன்றத்தை நாடுகிறது. ஆனாலும், மத்திய அரசிடமிருந்து அவர்களுக்கு எந்த உதவியும் கிடைத்ததாகத் தகவல் இல்லை. ஆக்ஸிஜன் நிரப்புவதற்காக சிலிண்டர்களுடன் பல மணி நேரம் மருத்துவமனை வாயில்களில் தவமிருப்பவர்களுக்குத்தான் உயிரின் மதிப்பு தெரியும். ஆக்ஸிஜனுக்காகத் தவமிருந்த மக்கள் ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து, ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வைத்திருந்த குடோனைச் சூறையாடிய சம்பவமும் நிகழ்ந்தது. தன்னைச் சேர்ந்த ஒருவர் தன் கண்ணெதிரிலேயே கொஞ்சம் கொஞ்சமாக இறப்பதைப் பார்க்கச் சகியாத மக்கள், அவர்களுக்கு நீதி கிடைக்காத வேளையில் இப்படித்தான் நடந்துகொள்வார்கள்.
மத்திய அரசின் புறக்கணிப்பு
மரணம் அவரவர் வீட்டுக்கதவைத் தட்டும்வரை இதுபோன்ற எளியவர்களின் குரல் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எட்டாது போல. உத்தரப் பிரதேசத்தில் இப்போது அப்படியொரு நிலைதான் இருக்கிறது. அமைச்சர்கள், உயர் பதவியில் இருக்கிறவர்கள் சிபாரிசு செய்தால் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக எழுந்த புகாரையொட்டி, அம்மாநில அரசை வன்மையாகக் கண்டித்துள்ளனர் உத்தரப் பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதிகள். மகாராஷ்டிரத்தின் நிலை இன்னும் மோசம். “மகாராஷ்டிர மாநிலத்தில் கடுமையான ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவுவதால் மத்திய அரசின் உதவியைப் பெறுவதற்காகப் பிரதமர் அலுவலகத்தை மூன்று முறை தொடர்பு கொண்டோம். மூன்று முறையும் பிரதமர் மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் செய்யச் சென்றிருக்கிறார் என்றே பதில் கிடைத்தது” என்று மகாராஷ்டிர அரசு சார்பில் சொல்லப்பட்டது. இதைவிடக் கொடுமை, அந்த மாநிலத்தைச் சேர்ந்த 16 மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், உயிர்காக்கும் மருந்தான ‘ரெம்டெசிவிர்’ மருந்தைத் தயாரிக்கின்றன. மகாராஷ்டிர மாநிலத்துக்கு அந்த மருத்தை சப்ளை செய்யக் கூடாது என மத்திய அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த அதிர்ச்சியின் உச்சமாக ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான ரெம்டிவிசிர் மருந்துகள் கடத்தப்படுவதாக மும்பை காவல்துறைக்குத் தகவல் வர, அப்படியொரு குழு குஜராத்தில் பிடிபட்டிருக்கிறது. தங்கள் ஆட்சி நடக்கும் மாநிலத்துக்கு மட்டுமே மருந்து கிடைத்தால் போதும் என்கிற மோசமான அரசியல் நிலைப்பாட்டுக்கு இதைவிட உதாரணம் தேவையில்லை. மத்திய அரசின் இந்தச் செயல் மகாராஷ்டிர மக்களைக் கொதிப்படையச் செய்திருக்கிறது.
ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கிறது. ஏப்ரல் 23 நிலவரப்படி வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் ஆக்ஸிஜன் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறால் ஏழு பேர் இறந்தனர். நாசிக்கில் ஆக்ஸிஜன் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவால் விநியோகம் தடைபட்டு 24 பேர் உயிரிழந்தனர். டெல்லியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 25 பேர் இறந்தனர். தவிர மும்பையின் புறநகர்பகுதியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 13 பேர் தீயில் கருகி உயிர்விட்டனர். அங்கே இறப்பு எண்ணிக்கை கூடும் என்றும் சொல்லப்பட்டது. நாடு முழுவதுமே மருத்துவமனைகளில் நிலவுகிற ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டைச் சீராக்குவதற்கான எந்த முயற்சியையும் இதுவரை மத்திய அரசு எடுத்ததாகத் தெரியவில்லை.
கண்டுகொள்ளப்படாத பரிதாபம்
மருத்துவமனையில் இடம் கிடைக்காததால் வீட்டிலேயே உயிரிழந்தவர்கள் ஏராளம் என்றாலும், உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த பத்திரிகையாளர் வினய் வத்சவாவின் மரணம் கல் நெஞ்சையும் கரையச் செய்யும். 65 வயதான இவர் கொரோனா அறிகுறிகள் இருந்ததால் கோவிட் பரிசோதனை செய்துகொண்டார். பரிசோதனை முடிவுகள் வராத நிலையில் இவரை எந்த மருத்துவமனையிலும் அனுமதிக்கவில்லை. நேரம் செல்லச் செல்ல இவரது உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தது. அதன் அளவு 50க்கும் கீழே சென்றபோது அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மருத்துவ அதிகாரிகளை டேக் செய்து தன் நிலை குறித்து ட்விட்டரில் பதிவிட்டார். “எந்த மருத்துவமனையிலும் ஆய்வகத்திலும் யாரும் போனை எடுக்கவில்லை” என்று குறிப்பிட்டார். பிறகு அவரது ஆக்ஸிஜன் அளவு 31 என்று ட்வீட் செய்தார். அதன் பிறகு அவரிடமிருந்து தகவலே இல்லை. ஆயிரக்கணக்கானோர் அந்தச் செய்தியைப் பார்த்திருக்கிறார்கள். பலர் அறிய அந்தப் பத்திரிகையாளர் தன் உயிரை விட்டிருக்கிறார். தன் தந்தையின் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைந்ததுமே அவரது மகன் மூன்று மருத்துவமனைகளுக்குச் சென்றார். எங்கேயும் அனுமதியில்லை என்ற பதிலே கிடைத்தது. கொரோனா பரிசோதனை முடிவு இல்லாததால் தலைமை மருத்துவ அலுவலரிடம் அனுமதி கடிதம் பெற மகன் காத்திருக்க, தந்தை மூச்சுத் திணறி இறந்தார். கேட்பவரை நிலை குலைய வைக்கும் இப்படியான அவலங்கள் பல நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
கடைசி செய்தி
தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் மருத்துவர்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகிறார்கள். கடந்த மார்ச் நிலவரப்படி 18 ஆயிரம் மருத்துவர்கள் தொற்றுக்கு ஆளானதாகவும் அவர்களில் 168 மருத்துவர்கள் இறந்துவிட்டதாகவும் இந்திய மருத்துவக் கழகம் தெரிவித்திருக்கிறது. அண்மையில் மும்பையைச் சேர்ந்த டாக்டர் மனீஷா யாதவ், ஏப்ரல் 18 அன்று தன் ஃபேஸ்புக் பக்கத்தில் “இதுவே நான் சொல்லும் கடைசி காலை வணக்கமாக இருக்கலாம். இனி உங்களை இந்தத் தளத்தில் சந்திப்பேனா எனத் தெரியாது. உடலுக்கு அழிவுண்டு. ஆன்மா அழிவதில்லை” என்று எழுதினார். மறுநாளே அவர் இறந்துவிட்டார். இப்படியான இழப்புகளுக்குப் பிறகு பல மாநில அரசுகளும் மெத்தனமாகவேச் செயல்படுகின்றன.
தடுப்பூசி வந்துவிட்டது, ெகாரோனாவைக் கட்டுக்குள் வைத்துவிடலாம் என்கிற அரசின் அறிவிப்பை நம்பித்தான் மக்கள் வேலைக்குச் செல்லத் தொடங்கினர். ஜனவரி இரண்டாம் வாரத்தில் கோவிஷீல்டு, கோவாக்ஸின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தன. இந்தத் தடுப்பூசிகள் நம்மைக் காப்பாற்றிவிடும் என்கிற நம்பிக்கை நீடிக்கவில்லை. இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட மருத்துவர் ஒருவரின் இறப்பு, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஏற்பட்ட தொற்று போன்றவை மக்களிடைய அச்சத்தை ஏற்படுத்தின. தவிர, கோவாக்ஸின் தடுப்பூசி மூன்றாம் கட்ட சோதனையைக் கடக்கும் முன்னரே மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இதுவும் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதைத் தடுத்தது.
தடுப்பூசி குழப்பங்கள்
தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்து அரசு சார்பில் முறையான வழிகாட்டுதல் இல்லாததால் பலருக்கும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு இல்லை. 60 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு எளிதில் ஆளாகக்கூடும் என்பதால் ஆரம்பத்தில் அவர்கள் கட்டாயமாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றனர். பிறகு 45 வயதுக்கு மேற்பட்டோரில் நீரிழிவு, மிகை ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட துணைநோய் கொண்டவர்கள் தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டது. இவர்களுடன் மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. தடுப்பூசியின் நம்பகத்தனமை குறித்த சந்தேகம் இருந்தபோதும் தற்காப்பு நடவடிக்கையாகப் பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வந்தனர். ஆனால், அதற்குள் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனைகளில் 250 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்ட தடுப்பூசியின் விலையைத் தற்போது 600 ரூபாயாக உயர்த்தியிருக்கின்றனர். தட்டுப்பாடும் விலையேற்றமும் சேர்ந்துகொள்ள தடுப்பூசி போட வழியில்லாமல் மக்கள்தான் திண்டாடிவருகின்றனர்.
அண்மையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாளே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நடிகர் விவேக்கின் மரணம், மக்கள் மத்தியில் பதற்றத்தையும் பயத்தையும் ஏற்படுத்திவிட்டது. தடுப்பூசிக்கும் அவரது மரணத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அரசுத் தரப்பில் சொல்லப்பட்டாலும் தடுப்பூசி குறித்து இன்னும் தேவையான விழிப்புணர்வை அரசு கொடுக்கவில்லை. இதுவே, பலரையும் தடுப்பூசி போட்டுக்கொள்வதிலிருந்து தடுக்கிறது. மக்களின் இந்த அச்சத்தைப் போக்கி, அனைவருக்கும் அரசு சார்பில் தடுப்பூசி போடுவதுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மேம்பட்ட சிகிச்சை கிடைக்க அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும். தேர்தல் முடிவைவிட இதுதான் முக்கியம். காரணம், ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பற்றது!
தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் பொிய அளவில் பாதிப்படையாமல் கொரோனாவை வென்றிருக்கிறார்கள். ஆகவே, தடுப்பூசி அவசியமானது என்பதை மக்களும் புரிந்துகொள்வது அவசியம்.