ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள பர்வான் மாகாணத்தில் நேற்றுமுன்தினம் கனமழை பெய்தது. இதனால், அந்தப்பகுதியில் வெள்ளம் சூழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கியும், அடித்துச் செல்லப்பட்டும் உள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, ஏராளமான பேர் வீடுகளை இழந்துள்ளனர். அதிகப்படியான வெள்ள நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதால், மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதுடன், போக்குவரத்து சேவையும் முற்றிலும் தடைப்பட்டுள்ளது. பெரு வெள்ளம் காரணமாக 1000க்கும் அதிகமானோர் வீடுகளை இழந்தும் 31 பேர் உயிரிழந்தும் 100க்கும் மேற்ப்பட்டோர் காணாமல் போயும் உள்ளனர். இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் வானிலை ஆய்வு மையம் அந்த நாட்டில் கனமழை தொடர்ந்து சில நாட்களுக்கு பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக மீட்பு பணிகளிலும் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர்.