டாக்டர் ஆஷா ரஜினி ஒரு கால்நடை மருத்துவர். சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். தனது 62ஆவது வயதில் ஓடிப் பார்க்கலாம் என்று முயன்றவர். 65 வயதில் 42 கிமீ மராத்தான் ஓடி சாதனை புரிந்தவர்.
நாகர்கோயிலைச் சேர்ந்த ஆஷா ரஜினி பள்ளி இறுதியில் நல்ல மதிப்பெண் பெற்றார். மருத்துவம் படிக்க வேண்டும் என்று பெற்றோர் விரும்பினார்கள். அவர்கள் அரசு ஊழியர்களாக இருந்தார்கள். இலங்கையில் பிறந்திருந்தாலும் நாகர்கோயிலில் வளர்ந்தார் ஆஷா.
‘கால்நடை மருத்துவம் பயின்றால் எளிதாக இருக்கும் என்றுதான் நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது அது மிகவும் கடினம் என்று’ என்கிறார் ஆஷா.
எப்போதும் விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்த ஆஷாவுக்குப் படிப்பில் நாட்டம் இல்லையாம். ஓட்டப்பந்தயங்களில் தவறாமல் கலந்துகொண்டாராம். பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் எப்போதும் ஆஷா ஆஜர் ஆகிவிடுவாராம்.
’சின்ன வயதிலிருந்தே எனக்கு அடிக்கடி உடம்புக்கு வந்துவிடும். அதனால் விளையாட்டு ஆசையை அடக்கி வைத்தேன்’ என்கிறார் அவர். ‘இப்போதும் எனக்கு ஆஸ்துமாதான்’ என்று அவர் கூறுகிறார். 33ஆவது வயதிலேயே அவருக்கு நீரிழிவு நோய் வந்துவிட்டதாம்.
’எனக்குத் தொடக்கத்தில் தடகளப் போட்டிகள்தான் மிகவும் விருப்பம்’ என்று ஆஷா கூறுகிறார்.
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் பணிக்குச் சேர்ந்தபோது நேரமின்மை காரணமாக எந்த விளையாட்டிலும் கலந்து கொள்ளவில்லை என்று கவலை கொள்கிறார் ஆஷா.
‘நேரம் இல்லை என்று விளையாட்டை விட்டுவிடாதீர்கள் என்று நான் எல்லோரிடமும் கூறுகிறேன்’ என்று சிரிக்கிறார் அவர்.
ஆய்வுப் பட்டம் முடித்து கல்லூரிப் பேராசிரியராகவும் இருந்தார் ஆஷா ரஜினி.
53 வயது ஆகும்போது அவருக்கு மார்பகப் புற்றுநோய் வந்தது.
‘என் இடது மார்பு நீக்கப்பட்டது. பிறகு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. அதை நான் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை’ என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ஆஷா.
பணி மூப்பு பெற்று வந்த பின்னால் நீரிழிவு நோயின் கடுமையைக் குறைப்பதற்காக ஓட்டப் பயிற்சி மேற்கொண்டாராம் ஆஷா ரஜினி. ‘புற்றுநோய் வந்த பின்னால் நீரிழிவு நோய்க்காக இன்சுலினில் இருந்தேன். இனி ஓடினால்தான் மீள முடியும் என்று நினைத்தேன்’ என்கிறார் அவர்.
அவர் ஓடத் தொடங்கியபோது வயது 62.
சில நாட்கள் ஓடிய பிறகு எட்டு கிமீ அளவுக்கு ஓடிவிட்டாராம் ஆஷா. பலரும் ஆச்சர்யப்பட்டுப் போனார்களாம். சிறிய வயதில் ஊரில் ஓடிக் கிடைத்த அனுபவம் உடலில் இருந்திருக்கும் என்று விளக்குகிறார் ஆஷா.
‘காலை சீக்கிரம் எழாவிட்டால் மலைப்பாதை களில் அப்பா ஓட வைப்பார்’ என்று சொல்கிறார் அவர்.
ஒரே மாதத்தில் 10 கிமீ மராத்தான் போட்டியில் தன் வயதுப் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்றாராம் ஆஷா.
’அதுதான் என்னை எனக்கு அடையாளம் காட்டியது’ என்று அவர் கூறுகிறார்.
42 கிமீ முழு மராத்தான் ஓட்டத்திலும் ஆஷா கலந்துகொண்டார்.
‘அந்த ஓட்டத்தின் ஒரு மாதம் முன்னால் என் கால் பெரு விரல் உடைந்துவிட்டது. அது ஆறிய பின்னால் மருத்துவர் அறிவுரைப்படி ஐந்து கிமீ ஓடிப் பயிற்சி செய்தேன். வலி இல்லை. அப்படியே 42 கிமீ ஓடினேன். என் வயதுப் பிரிவில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது’ என்று ஆஷா விளக்குகிறார்.
இதன் மூலம் மராத்தான் சாதனையாளர் என்ற பட்டமும் அவருக்குக் கிடைத்தது.
’ஓட்டத்தில் எனக்குப் பல விழுப்புண்கள் கிடைத்திருக்கின்றன. கால்களில் வலி வருவது, கால் பிடித்துக்கொள்வது, விழுந்துவிடுவது என்றெல்லாம் நிறைய நடந்திருக்கின்றன’ என்று பெருமையுடன் கூறுகிறார் அவர்.
ஊட்டி, கொல்லிமலை, ஏற்காடு போன்ற மலைப்பிரதேங்களில் சுமார் 30 கிமீ அளவுக்கு ஓடி முடித்துவிட்டாராம் ஆஷா.
‘மரநாடு என்ற மலைப் பகுதியில் 50 கிமீ அளவுக்கான மராத்தான் ஓட்டம் இருக்கிறது. அதில் ஓடி சாதனை புரிய வேண்டும் என்று நினைக்கிறேன்’ என்று கண்களில் ஒளி தெரியக் கூறுகிறார் ஆஷா ரஜினி.
கால்நடை மருத்துவத்தில் பேராசிரியராகப் பணியாற்றி சிறந்த ஆசிரியர் விருதைப் பெற்றிருக்கிறார் அவர். கோழி வளர்ப்பின் பொருளாதாரம் பற்றி அவர் எழுதிய நூல் பரவலாகக் கவனிக்கப்பட்டது. பறவைகள் வளர்ப்பின் அறிவியல் பற்றிய அவருடைய நூல் பாடத்திட்டத்திலும் வைக்கப்பட்டிருக்கிறது.
‘மிகப் பெரிய வணிகமாகிவிட்ட கோழி வளர்ப்பு பற்றிய நுணுக்கங்கள் எல்லோருக்கும் தெரிய வேண்டிய அவசியம் இருக்கிறது. அதன் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது பற்றி நான் எழுதியிருக்கிறேன்’ என்கிறார் டாக்டர் ஆஷா ரஜினி. நாற்பது வயதைத் தாண்டிய பெண்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார் ஆஷா. ஓட்டப்பயிற்சி பற்றிய வகுப்புகளையும் அவர் எடுக்கிறார்.
ஆஷாவின் கணவர் பிளாஸ்டிக் எந்திர வணிகத்தில் இருந்தவர். அவருடைய மகன் விமானியாக இருக்கிறார்.
‘வாழ்வில் ஓட்டத்தை நிறுத்திவிடாதீர்கள். இலக்குகளை அடை யுங்கள். இல்லா விட்டால் இலக்கு களை நோக்கி ஓடுங்கள்’ என்கிறார் டாக்டர் ஆஷா ரஜினி.