இந்தக் காலத்துத் தம்பதியருக்குப் பொறுமையே இருப்பதில்லை; எதிலுமே எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுத்துவிடுகிறார்கள் என்கிற பெரியவர்களின் புலம்பல் பெரும்பாலான வீடுகளில் இன்று வழக்கமாகிவிட்டது. அந்தக் காலம்போல இப்போதும் கொடுமைகளைச் சகித்துக்கொண்டிருக்க முடியாது என்பது இளம் தம்பதியினரின் வாதமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் நீதிமன்றங்களில் விவாகரத்துக்காகக் காத்திருப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதே நேரத்தில் தற்போது விவாகரத்துகள் அதிகரிக்கின்றன என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட முடியாது. ஒரு மண முறிவுக்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. பெண்கள் நிறைய படிக்கிறார்கள், சுதந்திரமாக வாழ விரும்புகிறார்கள், பணத்தேவைகளில் ரொம்பவும் சுதந்திர மாக இருக்கிறார்கள் என்பது போன்றவைதான் விவாகரத்து அதிகமாகக் காரணம் என்கிற எதிர்மறையான எண்ணத்தில்தான் பலரும் இருக்கின்றனர். உண்மையில் கணவன், மனைவி இருவருக்கும் விவாகரத்து செய்ய வெவ்வேறு காரணங்கள் இருக்கலாம். இதுதான் காரணம் என்று இருவரும் பேசி முடிவெடுக்கிறபோது பரஸ்பர விவாகரத்து ஏற்படுகிறது. ஏதோவொரு புள்ளியில் கணவன், மனைவி இருவருக்கும் ஒத்துப்போகவில்லை. அந்த மன வலியோடு வாழ்நாள் முழுவதும் வாழ்வதை விடப்பிரிந்து விடுவது நல்லது என்று நினைக்கிற போது இருவரும் பரஸ்பர விவாகரத்துக்குப் போகிறார்கள்.
தவிர, வாழ்க்கை இனிமையாக இல்லை, மனக்கசப்புடன் இருக்கிறது என்பதற்கெல்லாம் யாரும் சட்டென்று விவாகரத்து செய்துவிடுவ தில்லை. திரு மணம் ஆன உடனே சிறு சிறு சிக்கல்களுக்கு எல்லாம் பிரிகிறவர்களும் குறைவு. திருமணம் ஆகி ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு அந்த அமைப்பில் தங்களை ஒப்புக்கொடுக்க குறைந்தது நான்கு வருடங்கள் ஆகும். திருமணம் ஆன முதல் வருடம் என்பது ஹனிமூன் பீரியட். இரண்டாவது வருடத்தில்தான் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு வரும். அதாவது, வெவ்வேறு சூழ்நிலையில் வாழ்ந்த, வளர்ந்த இருவரும் பேச வாய்ப்பு கிடைக்கும்போது, அவரவர் சிந்தனைகள் வெளிப்படும். அதேபோன்று முதல் மூன்று வருடங்களில் ஒருசில மனக்கசப்புகள் வரத்தான் செய்யும். ஒரு சில தம்பதிக்குள் இரண்டாம் வருடத்திலேயே குழந்தை பிறந்துவிடுகிறது என்றால் அவர்களுடைய கவனம் குழந்தையின் பக்கம் போய்விடும். ஒரு சில ஜோடி மூன்றாவது வருடத்தில் ஒருத்தரை ஒருத்தர் புரிந்துகொள்வார்கள். கிட்டத்தட்ட நான்காவது வருடத்தில்தான் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு அனுசரித்துப் போவார்கள்.
குழந்தை பிறந்ததற் குப் பின்பும் ஏதாவது பிரச்சினை வருகிறது என்றால், அதற்கு என்ன காரணம் என்று ஆராய வேண்டும். என்ன காரணம் என்று ஆராய்ந்த பின்புதான் விவாகரத்துக்குப் போக வேண்டும். நாம் ஒட்டுமொத்தமாக இவ்வளவு விவாகரத்து ஆகியிருக்கிறது என்றுதான் பார்க்கிறோமே தவிர, அதற்கான காரணங்களை யாரும் ஆராய்ந்து பார்ப்பதில்லை.
குடும்ப வன்முறைதான் பெரும்பாலானோர் விவாகரத்து பெற காரணமாக இருக்கிறது. குறிப்பாக உடல்ரீதியான வன்முறை. சிலருக்கு மனரீதியான காரணமும் இருக்கலாம். இவை தவிர, தம்பதியரில் யாராவது ஒருவருக்கு உடல் சார்ந்த குறைபாடு இருந்தாலும் விவாகரத்து பெறலாம். உடல் குறைபாடு வெளியே தெரிகிற அல்லது பேசப்படுகிற அளவுக்கு மனரீதியான சிக்கல் அவ்வளவு எளிதாக வெளியே யாருக்கும் தெரியாது. அது மறைமுகக் குறைபாடு. அதனால், இந்தக் குறைபாட்டால் ஏற்படும் விளைவுகள் மோசமானதாக அமைந்துவிடும். உடன் இருக்கிற துணையோ குழந்தைகளோகூடப் பாதிக்கப்படலாம்.
விவாகரத்துக்கு இன்னொரு முக்கியமான காரணம், ஆணின் தவறான நடத்தையும் பழக்கவழக்கமும். குடும்பத்தில் ஒரு ஆண் மது அருந்துபவராகவோ வேறு சில போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகவோ இருந்தால், அந்த ஆணோடு வாழும் பெண்ணுக்குத் தனிப்பட்ட முறையிலும் குடும்பத்திலும் எந்த நிறைவும் நிம்மதியும் கிடைக்காது. வருமானத்திலும் பெரிய அளவுக்கு சந்தோஷம் இருக்காது. பெரும்பாலும் மன அழுத்தமே மிஞ்சும். இப்படியொரு சூழலில் வளரும் குழந்தைகளும் பாதிக்கப்படுவார்கள். தனக்கும் குழந்தைகளுக்கும் எந்த நன்மையும் பாதுகாப்பும் இல்லாத வாழ்க்கையை விட்டு வெளியேறுவதுதான் அந்தப் பெண்ணுக்கு விடுதலையாக அமையும். அந்த இடத்தில் விவாகரத்து தான் அவர்களுக்கு உதவும்.
விவாகரத்து என்று வந்ததுமே உடனே இருவருக் கும் அதைக் கொடுத்துவிட மாட்டார்கள். குடும்ப நல ஆலோசகரிடம் பேசச் சொல்வார்கள். என்ன பிரச்சினை, என்ன காரணம் என்பதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப முடி வெடுப்பார்கள். சரிசெய்து விடக்கூடிய பிரச்சினை என்றால் விவாகரத்துக்குப் பரிந்துரைக்க மாட்டார்கள். தீர்க்க முடியாத அளவுக்கு சிக்கல் இருந்தால்தான் விவாகரத்து வழங்குவார்கள்.
விவாகரத்தில் முக்கியமான ஒன்றைப் பலரும் மறந்துவிடுகிறோம். கணவன், மனைவி பிரியலாம். ஆனால், பெற்றோர் பிரிய முடியுமா? அப்படிப் பிரிந்தே ஆக வேண்டிய சூழல் இருக்கிறபோது அது குழந்தைகளைப் பாதிக்காதா? நிச்சயம் பாதிக்கும். ஆனால், சிலர் குழந்தைக்காகச் சேர்ந்து வாழ முடிவெடுப்பார்கள். அப்படி முடிவெடுத்த பிறகும் அந்த வாழ்க்கை அவர்களுக்கு நிம்மதியாக இருக்காது. தனக்கு ஒத்துவராத ஒருவருடன் அனைத்தையும் சகித்துக்கொண்டு வாழ்நாள் முழுவதும் வாழ்வது பெரும் வேதனை. அது அவர்களை மனதளவில் பாதிக்கும். இப்படியொரு மன வேதனையோடு வாழும்போது குழந்தை வளர்ப்பிலும் அது வெளிப்படத்தான் செய்யும். சகித்துக்கொள்ள முடியாத உறவைக் குழந்தைக்காகப் பொறுத்துக்கொள்வது பெரும்பாலான நேரம் சரியாக அமைவதில்லை. காரணம், உடல் நலத்தைவிட மன நலம் முக்கியம்.
இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். ஒரு உறவிலிருந்து பிரிந்து செல்வதால் எதையெல்லாம் இழக்கிறோம், எதையெல்லாம் பெறுகிறோம் என்பது மிக அவசியம். பிரிவதால் பாதிப்புதான் அதிகம் என்றால் அந்த முடிவைத் தள்ளிப்போடுவது நல்லது. குழந்தைகள் இருந்தும்கூடச் சிலர் பிரிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அப்போது குழந்தையின் பாதுகாப்பு, எதிர்காலம் குறித்து சிந்தித்துச் செயல்படுவது அவசியம். பரஸ்பர விவாகரத்து பெறுகிறபோது குழந்தைக்குத் தேவையான செலவைத் தந்தை ஏற்றுக்கொள்கிறார். ஆனால், மனநலம் பாதிக்கப்பட்டவரோ அல்லது மதுப்பழக்கத்துக்கு உள்ளானவரோ, மனச்சிதைவு நோய் கொண்டவராகவோ ஒருவர் இருக்கும்போது, அவர்கள் சிகிச்சைக்கு எந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள் என்பதை எல்லாம் பார்த்துத்தான் முடிவெடுப்பார்கள். அப்படியொரு சூழ்நிலையில் குழந்தைக்கு அவர்களால் எந்தப் பயனும் இருக்காது. அவர்களால் பண உதவி வழங்குவதும் இயலாத காரியமாகும்போது குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள்.
விவாகரத்து பெற்ற பிறகு அப்பா அல்லது அம்மா யாராவது ஒருவரிடம்தான் குழந்தைகள் வளர்கிறார்கள். பெரும்பாலும் அம்மாவிடம்தான் குழந்தைகள் இருப்பார்கள். இது தவிர கணவன் இறந்த பிறகு குழந்தைகளைத் தனியாக வளர்க்கிற பெண்களும் உண்டு. இவர்களும் சிங்கிள் பேரண்ட்தான்.
அடுத்தவர் துணையின்றிக் குழந்தைகளைத் தனியாக வளர்ப்பது சவாலானது. இருவரின் இடத்தை ஒருவரே நிரப்ப வேண்டும். அது அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துவதுடன் மிகப் பெரும் சுமையாகவும் இருக்கும். அம்மாவே அப்பாவின் இடத்தையும் நிரப்ப அனைத்து வேலைகளையும் செய்யும்போது அதை நூறு சதவீதம் முழுமையாகச் செய்ய முடியாது. பணத் தேவைக்கும் அவர்கள்தான் வேலைக்குச் செல்ல வேண்டும். வெளி வேலைகளையும் அவர்களே கவனிக்க வேண்டும். குடும்பத்துக்காகவும் குழந்தைகளுக்காகவும் நிறைய தியாகம் செய்ய வேண்டும். அவர்களுடைய தேடல், தேவை, வாழ்க்கை, உடல்நலம் எனப்பலவற்றையும் விட்டுக்கொடுக் கிறார்கள். இவ்வளவு செய்த பின் பும் அவர் களுக்கு நிறைவின்மை தான் ஏற்படும். நான் இவ்வ ளவு செய்தபின்பும் இந்த வாழ்க்கையில் எனக்கென்று என்ன இருக்கிறது என்று தோன்றும். அதை எப்படிச் சரிசெய்ய லாம்? அடுத்த இதழில் பார்க் கலாம்.
–
வந்தனா