சென்னை தீவுத் திடலில் நேற்று உணவுத் திருவிழா தொடங்கியது. தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் நடைபெறும் இந்த உணவுத் திருவிழாவை அமைச்சர்கள் மா.சுப்ரமணியம் மற்றும் சேகர்பாபு தொடங்கி வைத்தனர். சிங்காரச் சென்னை உணவுத் திருவிழா 2022 என்ற நிகழ்ச்சி நாளை இரவு 10 மணி வரை நடக்கவுள்ளது. 150 ஸ்டால்களில் நடத்தப்படும் இந்த உணவுத் திருவிழாவில் மகளிர் சுய உதவி குழு சார்பில் ஸ்டால்களும் இடம்பெற்றுள்ளது. கலாச்சார நிகழ்வுகளையும் உள்ளடக்கி இருக்கும் இந்த விழாவில் மாநிலம் முழுவதும் உள்ள நாட்டுப்புற கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். பார்வையாளர்களுக்கு நுழைவு கட்டணம் எதுவும் இல்லை என்பது தனி சிறப்பு. தமிழகத்தின் பாரம்பரியமான உணவான ராகி புட்டு, முடக்கத்தான் தோசை, இருட்டு கடை அல்வா உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகள் எளிதாக கிடைக்க வகை செய்யப்பட்ட இந்த உணவு திருவிழாவில் மாட்டிறைச்சி இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இன்று நண்பகல் 12 மணி முதல் உணவு திருவிழாவில் பீப் பிரியாணி விற்பனைக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.