திமுக சார்பில் கோவை அவிநாசி சாலையில் மாநகராட்சியின் தடையை மீறி ஒட்டப்பட்டிருந்த அரசின் சாதனை விளக்க போஸ்டர்களை அகற்ற அதிமுக மற்றும் பாஜகவினர் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்திருந்தனர். இதையடுத்து, அவர்களின் கோரிக்கையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் 10 நாட்களில் அவிநாசி சாலையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்ற திமுகவினருக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால், போஸ்டர்கள் அகற்றப்படாததால், நேற்று நள்ளிரவு 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் கொடிசியா அருகே ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். இதையடுத்து, அந்த பகுதியில் திமுகவினரும் திரண்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டு அந்த இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அப்போது இரு தரப்பினரும் கோஷங்கள் எழுப்பிய நிலையில் இருக்கும் போது, சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டிருந்த காவலர்களையும் மீறி பாஜகவினர் சிலர் தூண்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை கிழித்தனர். இதைத்தொடர்ந்து, அவர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, காவலர்களின் எதிர்ப்பையும் மீறி நள்ளிரவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு போஸ்டர்களை கிழித்த 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதற்கிடையில், கிழிக்கப்பட்ட போஸ்டர்களை திமுகவினர் மறுபடியும் ஒட்டினர்.