சென்னை தீவுத் திடலில் இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு சிங்காரச் சென்னை உணவுத் திருவிழா 2022 என்ற நிகழ்ச்சி தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை உணவுத் திருவிழா தொடங்கியது. காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் உணவு திருவிழாவில், 150 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மகளிர் சுய உதவி குழு சார்பில் ஸ்டால்கள் வைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு நுழைவு கட்டணம் எதுவும் இல்லாமல், தமிழகத்தின் பாரம்பரியமான உணவான ராகி புட்டு, முடக்கத்தான் தோசை, இருட்டு கடை அல்வா உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகள் எளிதாக கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. கலாச்சார நிகழ்வுகளையும் உள்ளடக்கி இருக்கும் இந்த விழாவில் மாநிலம் முழுவதும் உள்ள நாட்டுப்புற கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.