மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. அதன்படி, இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி அமெரிக்காவின் லாடர்ஹில் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. கேப்டன் ஹர்திக் பாண்ட்யா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான இஷான் கிஷன் 13 ரன்களும் ஸ்ரேயஸ் ஐயர் 11 ரன்களும் எடுத்த நிலையில், இஷான் வெளியேறினார். தொடர்ந்து விளையாடிய ஸ்ரேயஸ் மற்றும் தீபக் ஹூடா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஸ்ரேயஸ் ஐயர் 40 பந்துகளில் 64 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பிறகு, ஹர்திக் பாண்டியா மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி விளையாடும் போது மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் சிறிதுநேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் சஞ்சு சாம்சன் 15 ரன்கள், தினேஷ் கார்த்திக் 12 ரன்கள், ஹர்திக் பாண்டியா 28 ரன்கள், அக்ஷர் படேல் 9 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்திய அணியின் சுழற்பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்காமல், 15.4 ஓவர்களில் 100 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்மூலம் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஹெட்மயர் 56 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்திய அணி. முன்னதாக இரு நாட்டு கிரிக்கெட் அணிகளுக்கும் இடையே நடந்த ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது குறிப்பிடத்தக்கது.