இங்கிலாந்து நாட்டின் பெர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வரும் 22ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் எட்டாவது நாளில் இந்தியா 3 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் உட்பட 6 பதக்கங்களை வென்றுள்ளது. இந்த பதக்கங்கள் அனைத்தும் பளு தூக்குதல் மற்றும் மல்யுத்தப் போட்டிகளில் கிடைத்துள்ளது. அதில், 65 கிலோ எடை பிரிவினருக்கான இறுதிப்போட்டியில் பஜ்ரங் புனியா, கனடா வீரர் லாச்லன் மெக்னீஸை 9 க்கு 2 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார். 86 கிலோ எடை பிரிவில், தீபக் புனியா, பாகிஸ்தான் வீரர் இனாமை வீழ்த்தி தங்கம் வென்றார். மகளிர் பிரிவில் சாக்ஷி மாலிக், கனடா வீராங்கனை அனா கோடினெஸ் கோன்சாலஸை வீழ்த்தி தங்கம் வென்றார். 57 கிலோ எடை பிரிவில் அன்ஷு மாலிக் வெள்ளிப்பதக்கம் வென்றார். இவர்கள் 4 பேரும் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர்களைத் தவிர இந்திய வீரர்கள் மோகித் கிரேவால் மற்றும் திவ்யா கக்ரன் வெண்கலப்பதக்கங்களை வென்றனர். இதையடுத்து, 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 20 பதக்கங்களுடன் ஏழாவது இடத்தில் இருந்த இந்தியா, வீரர்களின் அதீத திறமையின் வெளிப்பாட்டால் நேற்று ஒரே நாளில் 3 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் உட்பட 6 பதக்கங்களை வென்று, 9 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 26 பதக்கங்களுடன் 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.