மற்ற பணிகளைப்போல் ஆசிரியப் பணி என்பது பணி மட்டுமல்ல; ஆயிரமாயிரம் குழந்தைகளின் கல்விக் கண்ணைத் திறக்கும் சேவை அது. அதனால்தான் மாதா, பிதாவுக்கு அடுத்த இடத்தில் குருவை வைத்திருக்கிறார்கள். அனைவருமே ஆசிரியப் பணியை இன்று சேவையாகக் கருதி செய்வதில்லை என்றபோதும் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிலர் நம்பிக்கை அளிக்கிறார்கள். அப்படியொரு நம்பிக்கை நட்சத்திரம்தான் ஹேமலதா.
பட்டதாரி ஆசிரியையான ஹேமலதா, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர். இவருடைய அம்மா தலைமை ஆசிரியை. ஹேமலதாவுக்கு ஆசிரியப் பணி பிடிக்கும் என்றாலும் காவல் துறையில் சேர வேண்டும் என்று நினைத்தார். ஆனால், காலம் அவரை ஆசிரியராக்கியது. 20 ஆண்டுகளாக இடைநிலைப் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றிவந்தார். பிறகு, பதவி உயர்வு பெற்று ஒன்பது ஆண்டுகளாகத் தமிழ் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
“ஒரு ஆசிரியராக என்னுடைய பணியை மழு மனதுடன் செய்கிறேன். அதனாலோ என்னவோ மாணவர்களுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். அதேபோல எனது மாணவர்களையும் எனக்குப் பிடிக்கும்” என்று சொல்லும் ஹேமலதா, கொரோனா நோய்த்தொற்று காலத்தில் பாடம் நடத்துவதில் சிக்கல்கள் இருந்ததாகச் சொல்கிறார்.
“கொரோனா காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை விட்டுவிட்டார்கள். தனியார் பள்ளிகளில் ஆன்லைனில் பாடங்கள் நடத்தினார்கள். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அப்படி நடத்தும் சாத்தியம் குறைவு என்பதால் பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தலின்பேரில் ஒரு வருடத்துக்குத் தேவையான கல்வி உபகரணங்களைத் தயார் செய்தேன். அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லாம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கவுன்சிலிங் கொடுக்கச் சொன்னார்கள். அதையும் செய்தேன்” என்கிறார் ஹேமலதா.
இவை தவிர பொதுச் சேவையையும் செய்திருக்கிறார். கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப்பொருட்களை வழங்கினார். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கும், சுகாதாரப் பணியாளர்களுக்கும் குளிர்பானங்கள் மற்றும் நீராகாரங்களை வழங்கினார். கொரோனாவுக்காகவே தொடர்ந்து சுமார் 30 நாட்களுக்கும் மேலாக இவற்றைச் செய்திருக்கிறார். சில நேரம் நன்கொடை பெற்றும் ‘ரெட் கிராஸ்’ போன்ற தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்தும் இது போன்ற பணியைச் செய்தார்.
“உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் யாரெல்லாம் கண்ணில்பட்டார்களோ அவர்களுக்கெல்லாம் உதவினோம். பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர், முதி யோர்கள் என்று பலருக்கும் உதவியிருக்கிறோம்” என்கிறார் ஹேமலதா.
முன் பின் அறியாதவர்களுக்கே உதவுகிறவர், தன் மாணவர்களை அப்படியே விட்டுவிடுவாரா?கொரோனா நேரத்தில் மாணவர்களுக்குப் பாடம் எடுப்பது எப்படி என்பது பற்றி யோசித்தவருக்கு, பாடத்தை எல்லாம் வீடியோவாக எடுக்கலாம் என்று தோன்றியிருக்கிறது. பாடங்கள் அனைத்தையும் வீடியோவாக எடுத்து, அதை மாணவர்களுக்கு பென்டிரைவில் பதிவேற்றிக் கொடுத்தார். வழக்கமான ஆன்லைன் வகுப்பைவிட இது மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருந்தது.
“தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் நடுத்தர, மேல்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய பெற்றோர்கள் ஓரளவுக்கு வசதி படைத்தவர்களாகவும் இருக்கிறார்கள். அதனால், அவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு சாத்தியமாகிறது. ஆனால், அரசுப்பள்ளி மாணவர்கள் அப்படியில்ல. அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பாடத்தை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தின் செயல்வடிவம்தான் பென்டிரைவ் மூலம் பாடம் நடத்துவது என்பது. பொதுவாகக் கண்ணால் பார்த்தும், காதால் கேட்டும் பாடம் படிப்பதுதான் மாணவர்களுக்கு மிக எளிதாகப் புரிகிறது. அதுமட்டுமல்லாமல் ஏதாவது சந்தேகம் என்றால் நான் தந்திருக்கும் வீடியோவைப் பார்த்தே நிவர்த்தி செய்துகொள்ளலாம். ஆனால், ஆன்லைன் வகுப்பில் அப்படிச் செய்ய இயலாது. மேலும், அதற்கு மொபைல், கணினி என ஏதோவொன்றில் இணைய இணைப்பு தேவை. தவிர, நிறைய மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் வகுப்பெடுக்க முடியாது. ஆன்லைன் வகுப்பில் இப்படியான சிறு சிறு பிரச்சினைகளை எல்லாம் மாணவர்கள் சந்திக்க நேரிடும். அதனால், பாடத்தை முழு வீடியோவாகப் பதிவு செய்து பென்டிரைவில் கொடுத்துவிட்டால், அவர்கள் தங்களுக்குத் தேவையான நேரத்தில் டிவியிலோ, கம்ப்யூட்டரிலோ அல்லது மொபைலிலோ பார்த்துக்கொள்ளலாம். மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்கிறார் ஹேமலதா.
ஹேமலதாவின் இந்த முயற்சியைப் பற்றி தொலைக்காட்சி சேனல்களிலும் பத்திரிகை களிலும் செய்தி வெளியிட்டார்கள். இது மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதால், இதுகுறித்துப் பிரதமர் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டது. புத்தகத்தில் உள்ள பாடமும் வீடியோவாகப் பதிவுசெய்து கொடுத்த பாடமும் ஒரே மாதிரியாக இருக்கிறதா என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவர்களிடம் கேட்டு அறிந்துகொண்டனர். அதுமட்டுமல்லாமல், இந்த வீடியோ பதிவுக்கு மாணவர்களிடம் பணம் ஏதும் பெறப்படவில்லை என்பதையும் அதிகாரிகள் விசாரித்து அறிந்தனர்.
ஹேமலதாவின் இந்த முயற்சிதான் அவரை இந்த ஆண்டுக்கான நல்லாசிரியர் விருது வரை அழைத்துச் சென்றிருக்கிறது. இதற்கும் விசாரணை நடந்தது. கொரோனா காலத்தில்கூட மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதற்குப் புதுவகையான முறையைக் கையாண்டதும், மாணவர்கள் மத்தியில் சிறந்த ஆசிரியை என்று பெயர் வாங்கியதும் ஹேமலதாவுக்கு நல்லாசிரியர் விருது கிடைக்க காரணமாக அமைந்தன.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அதில் இருந்து மீண்டவர்களுக்கும் கவுன்சிலிங் கொடுக்கும் பணியில் அப்போது ஹேமலதா ஈடுபட்டிருந்தார். அவரிடம் திடீரென விசாரணை நடத்தினார்கள். தன்னுடைய மாணவர்களுக்குக் கல்வியை மட்டுமல்லாமல், அவர்களுடைய வாழ்க்கைக்கு உகந்த சிறு தொழிற்கல்வி முறையையும் கற்றுக்கொடுப்பதாக அவர் சொல்ல, அதிகாரிகள் அதற்கான ஆதாரங்களை எல்லாம் காண்பிக்கச் சொன்னார்கள். இந்த விசாரணை எதற்கு என்று அவருக்குக் குழப்பமாக இருந்தது. சில நாட்கள் கழித்து தூர்தர்ஷன் நிருபர் ஹேமலதாவை அணுகி, ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் பிரதமர் பேசப்போவதாகத் தொிவித்து அவரிடம் பேட்டி கண்டார். அதேபோல் அடுத்த நாளே பிரதமர் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் ஹேமலதாவிடம் பேசினார்.
ஆனால், எந்தவொரு அங்கீகாரமும் அவரது இயல்பை மாற்றிவிடவில்லை. முன்னைக்காட்டி லும் அதிக உற்சாகத்துடன் செயல்படுகிறார். ஒன்பது முதல் பன்னிரெண்டாம் வகுப்புவரை தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி வகுப்பை நடத்துவதாக ஹேமலதா சொல்கிறார். இவரைப் போன்ற சேவை மனப்பான்மை கொண்டவர்களே இப்போதைய தேவை.