வட்ட முகம் கொண்ட வானவில்லே நீ
வயிற்றில் குடியேறி பதின்மூன்று
வாரங்கள் கழிந்து போயிற்று
உன் வருகைக்காய் பால்நிறைந்து
கனக்குது என் மார்பகங்கள்!
பாதி சுவாசத்தோடு இதோ மூலையில் நின்று
விட்டத்தைப் பிடித்துக்கொண்டு முனகுகின்றேன்
முதுகிலிருந்து தொடங்கியது வலி எனக்கு
முன்வயிற்றிற்கு வந்து வலுத்துவிட்டது!
ஐந்துநொடி பத்துநொடியாகி
அரைமணி ஒருமணி நேரமென
இடுப்பை இழுத்துப்பிடித்து உயிரோடு கொல்லுகிறது
கர்ப்பவாய் கொஞ்சம் கொஞ்சமாய்த் திறக்கிறது
ரத்தமும் பனிநீரும் உடைந்து
சொட்டுச்சொட்டாய்ப் பாய்கிறது!
ஆறுசென்டிமீட்டர் அளவுள்ள சின்னஞ்சிறு சிப்பி
அழகாய் விரிந்து உன்னை அழைக்கின்றது
சுகமாய் உன்னை வெளியேற்றத் துடிக்கின்றது!
உஸ்ஸ்ஸ்அய்யோஆஆஆஅம்மா என்று நான்
கதறும் ஒலி உனக்குக் கேட்கின்றதா?
சிசுவே நீ சிரமமின்றி பிறக்க நான்
படும்பாடு காதில் விழுகின்றதா?
என் மரணவலிக்கும் உன்
ஜனனவலிக்கும் இடையில் ஓடும்
இழைக்கோட்டுநொடியில் அம்மா என்ற குரலை
அதிகம் எதிர்பார்க்கின்றது என் தாய்மை!
இதோ மடியில் வந்துவிழுந்துவிட்டாய்,
ஆஹா!
அடியில் இருக்கும் காயவலி உன்
வதனம் கண்ட நொடியில்
காணாமல்போனதே!
மறந்துவிடாதே என் செல்வமே
நான் முதிர்ந்த காலத்தில்
முதியோர் இல்லத்தில்
என்னைச் சேர்க்க நினைத்தால்
முன்பதிவு செய்துவிடு
என் அறைக்கு அடுத்த அறையை!
உனக்குப் பின்னாளில்
இடம்கிடைக்காமல்கூடப் போகலாம்,
அந்த வலி இந்த வலியைவிடக்
கொடுமையானது
உனக்கும் எனக்கும்!
– ஆன்றனி ஜமுனா, நாகர்கோவில்.