கோடைக்காலம் தொடங்கி விட்டது. காலை ஏழு மணிக்கெல்லாம் வெயில் பளீரென முகத்தைத் தாக்குகிறது. சுட்டெரிக்கும் வெயிலைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எப்பாடுபட்டாவது கடந்துதான் ஆக வேண்டும். ஆண்டுதோறும் வரும் கோடைக்காலம் என்பதால் வழக்கமான முன்னெச்சரிக்கையுடன் வெயிலை அணுக வேண்டியதும் அவசியம்தானே. ‘அய்யய்யோ, இந்த வெயிலை எப்படிச் சமாளிக்கப் போகிறோமோ’ என நீங்கள் உங்களுக்குள் பேசிக்கொள்வது இங்கே வரை கேட்கிறது. ஆகவே, உங்களை இந்தக் கோடையில் இருந்து எப்படிப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதைப் பார்ப்போமா?
தற்போது கடைகளில் கம்புக் குருணை அதிக அளவில் கிடைக்கிறது. இந்த கம்புக் குருணையை வாங்கி குக்கரில் வேகவைத்து, மோர் அல்லது தயிர் கலந்து அதனுடன் பச்சை வெங்காயம் சேர்த்து உண்ணுங்கள். இதன் மூலம் உடல் வெப்பம் குறையும்; அதிகபட்ச வெப்ப நிலையால் ஏற்படும் சோர்வு, மயக்கம் போன்றவையும் நீங்கும். மீதி இருக்கும் கம்புச் சோற்றை ஒரு மண் சட்டியில் உருண்டை பிடித்துப் போட்டு விட்டு ஒரு சொம்பு நீரையும் ஊற்றி விடுங்கள். மறுநாள் காலை எழுந்தவுடன் இந்த நீரைக் குடித்தால் போதும், சூடுபிடித்தல் என்னும் வேதனை போகும். எனவே, உடம்பு சூடு பற்றிய கவலையே வேண்டாம். சுட்டெரிக்கும் சூரியனுக்குப் பகலில் கூட நீங்கள் பயமின்றி ‘ஹாய்’ சொல்லலாம். அந்த அளவு உடல் வெப்பத்தைக் குறைக்கக்கூடிய தன்மை கம்புத் தண்ணீருக்கு உள்ளது.
வெயிலின் காரணமாக அதிகபட்சமான வியர்வை நம் உடம்பிலிருந்து வெளியேறும். எனவே, நாம் இழக்கும் நீர்ச்சத்தைச் சமன் செய்வதற்காக நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் உதவியாக இருக்கும். காய்கறிகளைப் பொறுத்தவரையில் பூசணிக்காய், முள்ளங்கி, வாழைத்தண்டு ஆகியவற்றை அதிகமாகப் பயன்படுத்தப் பாருங்கள். கோடையின்போது உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு நீங்கள் மென் பானங்களையோ ஐஸ்கிரீம் வகைகளையோ வாங்கித் தர வேண்டிய அவசியமே இல்லை. உங்கள் வீட்டில் இருக்கும் மிக எளிய பொருள் வெந்தயம். இதை இரவில் ஊறவைத்து மறுநாள் காலையில் அந்த நீரைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை குடித்து வந்தாலே போதும் குழந்தைகளுக்கு ஏற்படும் நீர்க் கடுப்பு, உடல் சூடு, உடல் சோர்வு ஆகியவை முற்றிலும் நீங்கிவிடும்.
பழங்களைப் பொறுத்தவரையில், எப்போதும் பழரசங்களைப் பருகுவதைவிட அப்படியே பழமாகச் சாப்பிடும்போதுதான் நார்ச்சத்து முழுமையாகக் கிடைக்கும். எனவே, முழுப் பழத்தைக் கடித்துச் சாப்பிடும் பழக்கத்தைப் பெரியவர்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். இயற்கை யாகக் கிடைக்கும் இளநீர், நுங்கு, ஆரஞ்சு நீர்ச்சத்து நிறைந்த தர்ப்பூசணி, பன்னீர் திராட்சை, பதநீர், வெள்ளரிக்காய் போன்றவற்றைச் சாப்பிடலாம். விதையுள்ள பன்னீர் திராட்சைகளை மட்டுமே வாங்கிப் பயன்படுத்துங்கள். இதன் விதைகளையும் மென்று சாப்பிடப் பழக்குங்கள். கொட்டை என்று துப்பிவிட வேண்டாம்.
நாம் பயன்படுத்தும் ஃபிரிஜ்ஜில் நீரை வைத்து அருந்தாமல் மண் பானையில் நீரை ஊற்றி அருந்தினால் எண்ணற்ற பயன்கள் உண்டு. உடம்பின் வெப்பத்தைக் குறைத்துக்கொள்ள அவ்வப்போது நீர்மோர், அதனுடன் இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி, மிளகாய் சேர்த்துப் பருகலாம். எலுமிச்சைச் சாறு பருகி வருவது மிக நல்லது. அத்தோடு கரும்புச் சாறும் பருகலாம்.
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் முடிந்தவரை மசாலா கலந்த உணவுப் பொருள்களைத் தவிர்த்துவிடுங்கள். ஏனென்றால், அது உடம்பின் வெப்பநிலையை அதிகரிக்கக்கூடிய ஆற்றல் கொண்டது. எனவே மித உணவுகளான தயிர்ச் சோறு, தயிருடன் வெள்ளரி, பெரிய வெங்காயம் கலந்த கலவை, ராகிக் கூழ் ஆகியவற்றைச் சேத்துக்கொள்ளுங்கள். ஆவியில் வேகவைத்த உணவுப் பொருட்களான இட்லி, இடியாப்பம், கொழுக்கட்டை, பணியாரம் போன்றவற்றைச் சாப்பிடுவதன் மூலம் உடல் சூட்டைக் குறைப்பதோடு ஆரோக்கியத்தையும் பேணலாம்.
வெயில் காலத்தில் முடிந்தவரை இரண்டு வேளைகள் குளிப்பதன் மூலம் பாக்டீரியாக்கள், வைரஸ்கள் ஆகியவற்றால் ஏற்படும் தொற்றுகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கலாம். அத்தோடு வாரம் இரண்டு முறை தலைக்குக் குளித்தல் மிக நல்லது. தலைக்குக் குளிக்கும்போது செம்பருத்தி இலையை அரைத்து தேய்த்துக் குளித்தால் உடம்பின் சூடு குறைவதோடு முடியின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும். இது கோடையில் ஏற்படும் முடி உதிர்வைக் குறைக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை இந்த முறையைப் பின்பற்றினால் கோடையிலும் குளுகுளு என்று நீங்கள் காலத்தைச் சந்தோஷமாகக் கழிக்கலாம்.
-டாக்டர்.வே.இரா.பிருந்தா