இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் நகரில் 22ஆவது காமன்வெல்த் போட்டிகள் இன்று (ஜூலை மாதம் 28ஆம் தேதி) தொடங்கி வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்தப்போட்டியில் 72 நாடுகளைச் சேர்ந்த 5 ஆயிரத்து 054 வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த காமன்வெல்த் போட்டியில் முதல் முறையாக மகளிர் கிரிக்கெட் போட்டியும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் இந்தியா சார்பில், 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இதன் தொடக்கவிழா இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தொடக்க விழாவில் பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைக்கவுள்ளார். தொடக்கவிழா அணி வகுப்பில் இந்திய பேட்மிண்டன் வீரர் பி.வி. சிந்து இந்திய தேசிய கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.