அதிவேக இணைய சேவையை அளிக்கும் 5ஜி அலைக்கற்றை ஏலம் இணையத்தில் இன்று காலை தொடங்கியது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, அதானி குழுமம், பார்தி ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா ஆகிய நான்கு நிறுவனங்கள் பங்கேற்றுவுள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்க செலுத்த வேண்டிய முன்பண வைப்பு எனப்படும் இஎம்டி தொகையாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.14,000 கோடியை செலுத்தியுள்ளது. இதையொட்டி, ஒரு நிறுவனம் ஏலம் எடுக்கக் கூடிய அலைக்கற்றையின் அளவை இஎம்டி தொகையே பிரதிபலிக்கும். எனவே ஜியோ அதிக அளவிலான அலைக்கற்றையை ஏலம் எடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஜியோவைத் தொடர்ந்து, பாா்தி ஏா்டெல் நிறவனம் ரூ.5,500 கோடியும், வோடஃபோன் ஐடியா நிறுவனம் ரூ.2,200 கோடியும், அதானி நிறுவனம் ரூ.100 கோடியும் இஎம்டி செலுத்தியுள்ளது. இதன்மூலம், மிகக் குறைந்த அளவிலான 5ஜி அலைக்கற்றைகளையே அதானி நிறுவனம் ஏலம் எடுக்க வாய்ப்புள்ளது என்றும் தெரியவந்துள்ளது. தொடக்க நாளான இன்று மாலை 6 மணி வரை ஏலம் நடைபெறும். அதன் பிறகு, ரேடியோ அலைவரிசைகளுக்கான தேவையைப் பொருத்து எத்தனை நாட்கள் ஏலம் நடைபெறும் என்பது பின்னர் முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஏலத்தில் 600 மெகா ஹொ்ட்ஸ், 700 மெகா ஹொ்ட்ஸ், 900 மெகா ஹொ்ட்ஸ், 1800 மெகா ஹொ்ட்ஸ், 2100 மெகா ஹொ்ட்ஸ், 2300 மெகா ஹொ்ட்ஸ், 2500 மெகா ஹொ்ட்ஸ், 3300 மெகாஹொ்ட்ஸ் மற்றும் 26 கிகாஹொ்ட்ஸ் ஆகிய அலைவரிசைகளுக்காக ஏலம் நடைபெறுகிறது. 4ஜி அலைக்கற்றையைவிட 10 மடங்கு கூடுதல் இணைய சேவை வேகம் கொண்ட 5ஜி அலைக்கற்றையை வாங்க ரூ.70,000 கோடி முதல் ரூ.1 லட்சம் கோடி வரை நிறுவனங்கள் செலவிடும் என்று தொலைத்தொடா்புத் துறை நிபுணா்கள் தரப்பில் எதிா்பாா்க்கப்படுகிறது.