இந்தியாவின் 15ஆவது குடியரசுத் தலைவராக ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் திரெளபதி முர்மு இன்று பதவியேற்றுகொண்டார். இவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து திரெளபதி முர்மு பாரம்பரிய முறைப்படி ஊர்வலமாக வந்து பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந், குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான எம்.வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மத்திய அமைச்சா்கள், ஆளுநா்கள், மாநில முதலமைச்சர்கள், முப்படை தலைமை தளபதிகள்-மூத்த தளபதிகள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நாடாளுமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனர். பின்னர், உரையாற்றிய திரெளபதி முர்மு, “என்னை தேர்வு செய்த எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கு நன்றி, நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டதில் மகிழ்ச்சி. நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்திற்காக பணியாற்றுவேன் என்று கூறியுள்ளார். முன்னதாக திரௌபதி முர்மு டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.