கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூரில் இயங்கிவரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடியிலிருந்து குதித்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. உயிரிழப்பில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக மாணவியின் பெற்றோர் குற்றம்சாட்டி போராட்டங்கள் நடத்தி, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தனர். அதன்படி, மாணவியின் பெற்றோரின் கோரிக்கையை ஏற்று தமிழக காவல்துறை, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினரை கைது செய்ததுடன், மாணவியின் உயிரிழப்பு குறித்து சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரிக்கவும் உத்தரவிட்டிருந்தனர். இத்துடன், மாணவியின் உடலை மறு உடற்கூறாய்வு செய்யவும் உயர் மற்றும் உச்சநீதி மன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, மறு உடற்கூறாய்வும் முடிந்த நிலையில், இன்று நீதிமன்ற உத்தரவை அடுத்து கள்ளக்குறிச்சி பொது மருத்துவமனையில் இருந்த மாணவியின் உடலை பெற்றுக்கொண்ட பெற்றோர் தங்களின் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரிய நெசலூரில் இறுதி சடங்குகளை செய்து நல்லடக்கம் செய்தனர். இதனையொட்டி, அசம்பாவிதங்களை தவிர்க்க கள்ளக்குறிச்சி முதல் மாணவி இறுதி சடங்கு நடந்த மயானம் வரை பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மாணவி உயிரிழந்து 11 நாட்கள் ஆன நிலையில் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி இன்று தான் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த இளம்கருதின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.