நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த திங்கட்கிழமை (ஜூலை மாதம் 18ஆம் தேதி) நடைபெற்றது. தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் 24ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அடுத்த குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல், அவர் பதவி காலம் முடியும் முன்னரே நடத்தி முடிக்க வேண்டும். அதன்படி, நடந்து முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று (ஜூலை மாதம் 21ஆம் தேதி) நடைபெற்றது. இதில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளரான ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்மு தொடக்கம் முதலே முன்னிலையில் இருந்தார். இதில் மொத்தம் பதிவான 4754 வாக்குகளில் 53 வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது. 4701 வாக்குகள் வாக்கு எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மொத்த வாக்குகளின் 2824 வாக்குகள் பெற்று திரெளபதி முர்மு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு மொத்தம் 6,76,803 வாக்குகள் மதிப்பு கிடைத்துள்ளது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டணியின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹ 1877 வாக்குகள் பெற்றுள்ளார். அவரின் மொத்த வாக்குகள் மதிப்பு 3,80,177 ஆகும். இதன்மூலம் திரெளபதி முர்மு நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராகியுள்ளார். திரெளபதி முர்மு குடியரசுத் தலைவராகியுள்ளதன் மூலம் நாட்டின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவர் எனும் பெருமையை அவர் பெறுகிறார். இதையடுத்து முர்முவுக்கு தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.