ஐரோப்பிய நாடுகளில் கடந்த 10 நாட்களாக கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதையடுத்து, இங்கிலாந்து நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், அளவு கடந்த வெப்பம் காரணமாக ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளில் கட்டுக்கடங்கா காட்டுதீ பற்றி எரிந்துகொண்டு இருக்கிறது. இதனால் ஆயிரக்கணக்கில் மனிதர்கள் உயிரிழந்ததுடன், காட்டுயிர்களும் இறந்து வருகின்றன. தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளை சார்ந்த மக்களின் வீடுகள் தீக்கிறையானதால் அவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஸ்பெயினின் வானிலை ஆய்வு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ள தகவலின் படி, நாட்டின் பல பகுதிகளில் இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் தாண்டியதால், இந்தாண்டின் இரண்டாவது வெப்ப அலையில் 1,047 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 672 பேர் 85 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள், 241 பேர் 75 வயது முதல் 84 வயதுக்கு உள்பட்டவர்கள், 88 பேர் 65 வயது முதல் 74 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். வெப்ப அலைக்கு சுவாசம் மற்றும் இதய நோய்கள் உள்ளவர்களே அதிகம் இறந்துள்ளனர். முன்னதாக ஸ்பெயினின் முதல் வெப்ப அலை கடந்த ஜூன் மாதம் 11ஆம் தேதி தொடங்கி ஒரு வாரம் நீடித்துள்ளது. அப்போது வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் தாண்டியதால் 829 பேர் வெப்பம் தொடர்பான காரணங்களால் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.