தமிழ்நாடு ப்ரீமியர் லீக் 20ஓவர் டி20 கிரிக்கெட் போட்டியின் 24ஆவது லீக் ஆட்டம் நேற்று சேலம் எஸ்சிஎஃப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப்போட்டியில், சேலம் அணியை திருச்சி வாரியர்ஸ் அணி எதிர்கொண்டது. இதில், டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் விளையாடிய சேலம் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 87 ரன் எடுத்திருந்தது. அதிகபட்சமாக அணியின் கேப்டன் கோபிநாத் 24 ரன்கள் எடுத்தார். திருச்சி அணி கேப்டன் ரஹில் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து விளையாடிய திருச்சி அணி 5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டது. தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்ததால் டிஎல்எஸ் முறையில் திருச்சி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. திருச்சி அணிக்கு இது இரண்டாவது வெற்றியாகும். சேலம் அணிக்கு தொடர்ந்து இது 6ஆவது தோல்வியாகும். இந்த நிலையில், சேலத்தில் திருப்பூர் தமிழன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் இன்று மோதுகின்றன.