வளர்ந்து வரும் இளந்தலை முறை பெண் களிடம் எண்ணற்ற ஆரோக்கிய குறைபாடு கள் காணப்படுகின்றன. இதற்கெல்லாம் காரணம் நாம் உண்ணும் உணவில் ஏற்பட்ட மாற்றமே. உணவுப் பழக்கத்தால் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் பாதிப்படைந்து உள்ளனர். வயது வித்தியாசம் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கியம் இல்லாமல் இருக்கிறார்கள். இதனைச் சரிசெய்யக்கூடிய எளிய வழி, நாம் உண்ணும் உணவில் சிறு தானியங்களைச் சேர்த்துக் கொள்வதுதான். இதன்மூலம் ஆரோக்கிய குறைபாட்டில் இருந்து நாம் விடுதலை பெறலாம்.
அரிசி, கோதுமை உணவுகளில் இருந்து வேறுபட்டுப் பன்னெடுங்காலமாக நம் பாரம்பரியத்தில் பயன்படுத்தப்பட்டுவந்த கம்பு, சாமை, வரகு, கேழ்வரகு, குதிரைவாலி போன்ற ஆற்றலை அபரிமிதமாகத் தரும் சிறுதானியங்களை நாம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இவற்றில் காணப்படும் புரதச்சத்து, நார்ச்சத்து, ஃபைடிக் அமிலம், இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின்கள் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்தக் கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள உதவுகின்றன.
வரகு
வரகு அரிசியில் அரிசி, கோதுமையில் இருப்பதைவிட அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. சர்க்கரை நோயாளிகள் அரிசிக்குப் பதிலாகவும் கோதுமைக்கு மாற்றாகவும் வரகை உணவில் சேர்த்து வரும் போது ரத்தத்தில் சர்க்கரை அளவு மிக எளிதில் கட்டுக்குள் வரும். இதில் அதிக அளவு இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் பி உள்ளதோடு நிறைய தாதுப்பொருட்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இவற்றால் செரிமானம் விரைந்து நடக்கும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளைச் சரிசெய்வதோடு இடுப்பு வலியிலிருந்து விலக்கு அளிக்கிறது.
சாமை
நாம் அன்றாடம் பயன்படுத்தும் நெல் அரிசியில் இருப்பதைவிட 7 மடங்கு அதிக அளவு நார்ச்சத்து சாமையில் உள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கான மிகச் சிறந்த அரிசி சாமை அரிசி. வாரத்தில் இரண்டு முறை சாமையை உணவில் சேர்த்து வந்தால் அனைத்துவிதமான நோய்களில் இருந்து விடுதலை பெறலாம். இதேபோல் மற்ற சிறுதானியங்களில் இருப்பதைவிட அதிக அளவு இரும்புச்சத்து இதில் உள்ளதால் பெண்களுக்கு ரத்தசோகை ஏற்படாமல் தடுக்கிறது. பெரியவர்களுக்கு ஏற்படும் மலச்சிக்கலைச் சரிசெய்வதோடு மூல நோய் ஏற்படாமல் தடுக்கிறது. தாதுப் பொருட்களை உடலில் அதிக அளவில் உற்பத்தி செய்வதோடு உயிரணுக்களின் உற்பத்தியை மேம்படுத்தக்கூடிய ஆற்றலையும் சாமை பெற்றுள்ளது.
கம்பு
இந்தியாவில் விளையும் சிறுதானியங்களில் அதிக அளவு விளைவிக்கப்படும் தானியம் கம்பு. நம் முன்னோர்களின் காலை உணவில் மிக முக்கியமான இடம் பிடித்த தானியமும் இதுதான். உடலில் ஏற்படும் சூட்டைத் தணிப்பதோடு மன அழுத்தத்தையும் குறைக்கக்கூடிய சக்தி கம்புக்கு உண்டு. தினமும் ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்யக்கூடிய ஐ.டி. துறையைச் சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் கம்புக் கஞ்சியைக் குடிப்பதன் மூலம் எண்ணற்ற பயனைப் பெறலாம். இதன் மூலம் இவர்களின் மனச் சோர்வு, மன அழுத்தம் நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும்.
வளரும் குழந்தை களுக்கும் மாதவிடாய் துவங்கிய பெண் குழந்தைகளுக்கும் அடிக்கடி கம்பு உணவைத் தர வேண்டும். வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் இதில் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு.
மேலும், ரத்தத்தை சுத்திகரித்து, தாது உற்பத்தியை அதிகப்படுத்தி ஆண்,பெண் மலடினை நீக்கும். அத்தோடு இன்றைய இளம் பெண்கள் சந்தித்துவரும் இளநரை பிரச்சனைக்கு மிகச் சிறந்த தீர்வாக கம்பு இருக்கும். இதை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வதன் மூலம் இளநரையைத் தடுக்கலாம்.
தினை
முதல் முதலாக மனிதனால் பயிரிடப்பட்ட தானியமாகத் தினை விளங்குகிறது. இதில் புரதம், கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்துக்கள், மாவுச்சத்து மற்றும் வைட்டமின் ‘பி’, பாஸ்பரஸ், சுண்ணாம்புச்சத்து ஆகியவை உள்ளன.
இதை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் திடீரென ஏற்படும் மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் ஏற்படாமல் தற்காத்துக்கொள்ள முடியும்.
கேழ்வரகு
கேழ்வரகு என்று அழைக்கப்படும் ராகியில் செய்யப்படும் கூழ், களிக்கு ஈடான சுவையான உணவு உலகில் இல்லை என்று கூறலாம்.ராகிக் களி உடல் உஷ்ணத்தைக் குறைத்து உடலுக்கு வலிமை தரும். இதயநோயுள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது இது. குழந்தைகளுக்கு ஏற்ற, எளிதில் ஜீரணமாகும் அற்புதமான தானியமும் இதுதான்.
இதில் உள்ள கொழுப்பு, உலோகம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, விட்டமின் ஏ ஆகிய சத்துக்கள் ரத்தத்தைச் சுத்தி செய்யும். எலும்பை உறுதிப்படுத்தும். சதையை வலுவாக்கும். மலச்சிக்கலை ஒழிக்கும். அதிக நேரம் பசியைத் தாங்கச் செய்யும்.
மேற்கூறிய சிறுதானியங்களை வாரத்தில் மூன்று நாட்கள் உட்கொண்டு வந்தால் ஆரோக்கியமான வாழ்வை வாழலாம். அதைவிடுத்து வேற்று நாட்டு உணவுக்கு அடிமையாகி பீட்சா, பர்கர் போன்ற அதிக அளவு கொழுப்பு உள்ள உணவுகளை உண்பதால்தான் நமக்கு இன்று ஆரோக்கிய குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதை உணர்வுப்பூர்வமாக உணர்வதோடு நிற்காமல் சிறுதானியங்களை உங்கள் சமையல் அறையில் அதிகம் பயன்படுத்தினால் ஆரோக்கியம் மிகச் சிறப்பாகப் பேணப்படும்.