இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் கொரோனா நோய் தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட புகார்களில் சிக்கி தனது பதவியை கடந்த 7ஆம் தேதி ராஜினாமா செய்தார். இதனையடுத்து, புதிய பிரதமர் பொறுப்பேற்கும் வரை போரிஸ் ஜான்ஸனே பிரதமராக தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் புதிய பிரதமரை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அரசியலமைப்பு சட்டப்படி, ஆளும் கட்சித் தலைவர்தான் நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்க முடியும். எனவே, கட்சியின் தலைவரைத் தேர்வு செய்யும் வாக்கெடுப்பு கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது. இதில், 8 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் நிதியமைச்சா் ரிஷி சுனக், வா்த்தகத்துறை அமைச்சா் பென்னி மாா்டன்ட், வெளியுறவுத்துறை அமைச்சா் லிஸ் டிரஸ் உள்ளிட்டோா் போட்டியிடுகின்றனா். முதல் மூன்று சுற்று வாக்குப்பதிவுகளில் அதிக எம்.பி.,க்களின் வாக்குகளை பெற்று முன்னிலையில் இருந்து வரும் ரிஷி சுனக்கு 4ஆவது சுற்று வாக்குப் பதிவிலும் முதலிடம் பிடித்துள்ளார். அவரை ஆதரித்து 118 எம்.பி.க்களும், அடுத்தபடியாக பென்னி மாா்டன்டுக்கு 92 எம்.பி.க்களும், லிஸ் டிரஸ்ஸுக்கு 86 எம்.பி.க்களும், ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனர். இதில், 4ஆவதாக 59 எம்.பி.க்கள் மட்டுமே வாக்களித்த சமூக நலத்துறை அமைச்சா் கெமி பேடனாக், போட்டியிலிருந்து விலக்கப்பட்டாா். அதையடுத்து, முதல் மூன்று போ் மட்டுமே தற்போது மிஞ்சியுள்ளனா். இதையடுத்து இன்று (ஜூலை 20ஆம் தேதி) நடைபெறும் 5ஆவது சுற்று வாக்குப் பதிவில், இவா்களில் ஒருவா் போட்டியிலிருந்து விலக்கப்படுவாா். அதனைத் தொடா்ந்து, எஞ்சிய இருவரில் ஒருவரை கட்சித் தலைவராகவும், நாட்டின் புதிய பிரதமராகவும் நாடு முழுவதிலும் உள்ள கன்சா்வேட்டிவ் கட்சி உறுப்பினா்கள் தோ்ந்தெடுப்பாா்கள். புதிதாகப் பொறுப்பேற்கவிருக்கும் பிரதமரின் பெயா் அடுத்த மாதம் 5ஆம் தேதி அறிவிக்கப்படும்.