அறிவியல் துறையில், அறிமுகம் கொள்ள வேண்டும் என்ற இலக்கோடு பயணித்து, இன்று தன்னை ஒரு விஞ்ஞானியாக அடையாளம் காணச் செய்திருப்பவர் அருணா தத்தத்ரேயன்.
இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கீழ் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CLRI) ஓய்வுபெற்ற (Emeritus) விஞ்ஞானியாகவும், அறிவியல் மற்றும் புத்தாய்வுக் கழகத்தில் (AcSIR) பேராசிரியராகவும் அவர் வலம் வருகிறார்.
‘வினாவொன்றை வினவி அதற்கு அர்ப்பணிப்போடு விடை தேடுபவரே விஞ்ஞானி’ என்று கூறுகிறார் அருணா.
அருணா 1955 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். தனது தந்தையின் பணி காரணமாக டெல்லிக்குக் குடிபெயர்ந்தார். அங்கு தனது பள்ளிப்படிப்பை முடித்தார். அவரது பள்ளிக் காலத்தில் இயற்பியல்மீது அவர் அதீத ஆர்வம் கொண்டாராம்.
‘எனது ஆறாம் வகுப்பில், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாற்றை படிக்க நேர்ந்தது. அது எனக்கு விஞ்ஞானத்தின்மீது தீரா ஈர்ப்பையும், அறிவியல் சார்ந்த துறையில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியது’ என்கிறார் அருணா.
இயற்பியலைத் தனது இளங்கலை பட்டப்படிப்பாகத் தேர்ந்தெடுத்து, சென்னை மகளிர் கிறித்தவக் கல்லூரியில் பயின்றார் அவர். பின்னர் சென்னை கிறித்துவ கல்லூரியில் எம்.எஸ்சி படித்தார். அறிவியலில் தனக்கு இருந்த ஆர்வத்தினால் திருமணம் செய்துகொள்ள விரும்பாமல் மேற்படிப்பைத் தொடர எண்ணினாராம் அவர். அதனால் உயிர் இயற்பியலை (biophysics) தன் பாடப்பிரிவாகக் கொண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
தனது பிஎச்.டி.க்குப் பிறகு, அருணா ஜெர்மனியில் ஹம்போல்ட் ஃபெலோவாக (Humbolt fellow) இருந்த தத்தத்ரேயனை மணந்து கொண்டார்.
‘எனது கணவரும் விஞ்ஞானி என்பதால், என் பணியின்மீது நான் கொண்ட ஆர்வத்தைப் புரிந்துகொண்டு எனக்கு உறுதுணையாக நின்றார். அவரின் உத்வேகமும், எனது மகன் ஆதித்யாவின் ஊக்கமும் இல்லையெனில் என்னால் இத்துறையில் இதுவரை வந்திருக்க முடியாது’ என்று தன் குடும்பத்தை எண்ணிப் பெருமிதம் கொள்கிறார் அருணா.
1984 ஆம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள Max Planck Institute-இல் பிந்தைய முனைவர் பெல்லோஷிப்பாக (Post doctoral fellowship) மூன்று ஆண்டுகள் பணியாற்றினார் அருணா. பின்னர் அதே நிறு வனத்தில் விஞ்ஞானியாகவும் தன் பணியை மேற்கொண்டார்.
‘ஜெர்மனியில் நான் பணியாற்றிய அந்த ஆறு வருடகாலம் என் வாழ்நாளில் நான் கண்டிராத சிறந்த விஞ்ஞான அனுபவம்’ என்று மெய்சிலிர்க்கிறார் அவர்.
1990 ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய அருணா, CSIR- CLRI ஆய்வகத்தில் இணைந்து குழுத்தலைவராகப் பணியாற்றி, பின்னர் உயிர்இயற்பியல் ஆய்வகத்தின் தலைமை விஞ்ஞானியாகவும் தலைவராகவும் பொறுப்பேற்றார்.
தண்ணீர் பயன்பாடு இல்லாத தோல் பதனீட்டுத் தொழில்நுட்பம் மற்றும் தோல் கழிவுகளிலிருந்து பொருள் ஈட்டுவதற்கான தொழில்நுட்பம் போன்றவற்றை உருவாக்கும் ஆராய்ச்சியிலும் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
‘பெண் விஞ்ஞானியாக ஆராய்ச்சியில் ஈடுபடும் போது அதற்குத் தேவையான தகவல்களைத் தெரிந்து கொள்வதில் பல சிக்கல்கள் ஏற்படும். மேலும் ஆரம்பக் காலத்தில் ஆண் விஞ்ஞானிகளுக்குக் கிடைத்த சுதந்திரம் பெண் விஞ்ஞானிகளுக்குக் கிடைக்கவில்லை. அது என்னைப் போன்ற பெண் விஞ்ஞானிகளுக்கு இந்தத் துறையில் சாதிக்கத் தடையாக இருந்தது’ என்று கூறுகிறார் அவர்.
‘நான் ஆணாக இருந்திருந்தால் பல சிகரங்களைத் தொட்டிருப்பேன்.ஆனால் பெண்ணாக இருப்பதால் சில இடத்திற்குக் கூட செல்ல முடியவில்லை’ என்று வருத்தம் கொள்கிறார் அருணா.
பெங்களூர் இந்திய அறிவியல் அகாடமியால் உருவாக்கப்பட்ட இந்தியாவிலுள்ள பெண் விஞ்ஞானிகளின் தொகுப்பான ‘லீலாவதியின் மகள்கள்’ புத்தகத்தில் தொண்ணூற்றுஎட்டு விஞ்ஞானிகளில் ஒருவராக அருணா இடம்பெற்றார்.
கடந்த 30 ஆண்டுகளாக பயோ-கொலாய்டுகள், லாங்முயர் மற்றும் லாங்முயர்-ப்ளாட்ஜெட் பிலிமிஸ், லிபோசோம்கள் மற்றும் புரோட்டீசோம்கள் போன்ற பலவற்றிலும் தன் ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கிறார் அருணா தத்தத்ரேயன்.
‘சாதாரண செல்லையும் நோயுற்ற செல்லையும் எளிதில் வேறுபடுத்தக் கூடிய கருவியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பது எனது ஆசை’ என்கிறார் அவர்.
பிறகு பேராசிரியர் பணியிலும் பேரார்வம் கொண்டு அதிலும் ஈடுபட்டார் அருணா. 125க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.
‘விஞ்ஞானியாக கடினமான வினாக்களை எழுப்பினேன். பேராசிரியராக எளிமையான விடைகளை அளிக்கிறேன்’ என்று புன்னகைக்கிறார் அவர்.
சமீபத்தில் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் துறைத் தலைவராக ஓய்வு பெற்றார் அருணா. ஆனாலும் பல மாணவர்களுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறார் .
‘அறிவியல் துறையில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் தனிப்பட்ட சில சவால்கள் பெண்களை ஒரு வட்டத்திற்குள் முடக்கிவிடுகின்றன. அந்த வட்டத்தை எதிர்கொண்டு வெளியேறுங்கள். எட்ட இயலா உச்சமும் எட்டக்கூடிய அளவில் இருக்கும்’ என்று ’பெண்களின் குரல்’ வாசகர்களுக்கு உத்வேகம் அளித்து தன் பேட்டியை நிறைவு செய்கிறார் அருணா தத்தத்ரேயன்.