சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை துறைமுகம்-மதுரவாயில் உயர்மட்ட சாலை திட்டம் பல ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. பின்னர், சென்னை துறைமுகம்-மதுரவாயல் ஈரடுக்கு உயர்மட்ட சாலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கடந்த மே மாதம் கையெழுத்தானது. மேலும் சாலை எவ்வாறு அமையவுள்ளதற்கான முப்பறிமான வீடியோவும் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி கடந்த மே மாதம் 26ஆம் தேதி இந்த திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.5855 கோடி மதிப்பீட்டில் 20.56 கி.மீ. தொலைவிற்கு ஈரடுக்கு உயர்மட்ட சாலை அமைக்கப்படவுள்ளது. நேப்பியர் பாலம் முதல் கோயம்பேடு இடையே உள்ள தொலைவு மட்டும் இரட்டை அடுக்கு சாலையாக அமையவுள்ளது. இந்த நிலையில், 4 வழிச்சாலையாக அமையவுள்ள திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளி தமிழக அரசால் கோரப்பட்டுள்ளது. 2.5 ஆண்டுகளில் பணிகளை ஒப்பந்த நிறுவனம் முடிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் பராமரிப்பு பணிகளை சாலை அமைக்கும் நிறுவனங்கள் மேற்கொள்ளவும் நிபந்தனையாக கூறப்பட்டுள்ளது. பணிகள் திட்டமிட்டப்படி நிறைவேறினால் 2025ஆம் ஆண்டில் ஈரடுக்கு சாலையில் பயணிக்கலாம்.