வயில் காலம் வந்தாச்சு, இனி நாம் அதைச் சமாளிக்கத்தான் போகிறோம் என்பது ஒரு பக்கம் என்றாலும் நம்முடைய சருமம் வெயிலில் பாதிக்கப்படாமல் இருக்க வீட்டிலேயே என்ன செய்யலாம் எனத் தெரிந்துகொள்வோமா ?
சருமத்தைப் பொறுத்தவரை மூன்று வகை உண்டு. ஒன்று சாதாரண சருமம். இதை வறண்ட சருமம் என்றும் சொல்வார்கள். இரண்டாவது எண்ணெய்ப் பசைகொண்ட சருமம். மூன்றாவது இரண்டும் கலந்த சருமம்.
வறண்ட சருமம்
பிரச்சினையே இல்லாதது இந்த சாதாரண சருமம். எனவே, நாம் வீட்டிலேயே இதை எளிதாகப் பராமரிக்கலாம். வறண்ட சருமம் கொண்டவர்கள் தினமும் குளித்து முடித்து, இரண்டு சொட்டுத் தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் தேய்த்தாலே போதும்.
எண்ணெய்ப் பசை சருமம்
எண்ணெய்ப் பசை சருமம் உடையவர்கள் கோடையில் மிகவும் சிரமப்படுவார்கள். ஏனெனில், முகம் முழுவதும் எண்ணெய் தேய்த்துவிட்டது போன்று எப்பொழுதும் வழவழவென இருக்கும். மேலும், பகல் நேரத்தில் அதிகமாக எண்ணெய் வழியும். இப்படிப்பட்டவர்கள் கடலை மாவைப் பயன்படுத்தி வீட்டிலேயே ‘பேக்’ செய்யலாம்.
‘பேக்’ செய்முறை
1 ஸ்பூன் கடலை மாவு, 1 ஸ்பூன் தயிர், 1 ஸ்பூன் எலுமிச்சைச் சாறு இவை மூன்றையும் கலந்து அந்தக் கலவையை முகத்தில் பூசிக்கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசினால் முகம் பளிச்சென்று அழகாகும். இதனைத் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்குச் செய்தால் நல்ல பலனைத் தரும்.
இரண்டும் கலந்த சருமம்
வறண்டும் இல்லாமல் எண்ணெய்ப் பசையும் இல்லாமல் கலந்து இருக்கும் சருமம் கொண்டவர்களின் பாடு வெயில் காலத்தில் திண்டாட்டம்தான். இவர்களுக்கு சருமம் ஒரு சமயம் நன்றாக இருப்பதுபோல் தோன்றினாலும் திடீரென்று எண்ணெய் வழிந்து பிசுபிசுப்பாகத் தோன்றும். எனவே, வீட்டிலேயே சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றி இந்தத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
சிறிது மஞ்சள், தேன், அரிசி மாவு இவை மூன்றையும் சம அளவில் எடுத்து நீர் விட்டு நன்றாகக் குழைத்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்துக் கழுவிவிடவும் அல்லது இரண்டு நாளுக்கு ஒரு முறை கொஞ்சம் வெந்நீர் கொஞ்சம் குளிர்ந்த நீர் இரண்டையும் மாற்றி மாற்றி முகத்தில் அடித்துக் கழுவ வேண்டும். இப்படிச் செய்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
கை பராமரிப்பு
சிலருக்கு முகம் வேறு நிறத்திலும் கை வேறு நிறத்திலும் இருக்கும். அதாவது, வாகனம் ஓட்டுவது, வெயிலில் திரிவது என்று இருப்பதால் இப்படி கை மட்டும் கறுத்துவிடும். இப்படிப்பட்டவர்கள் முதலில் வெயிலில் செல்லும்போது கைக்கு கிளவுஸ் அணிந்து செல்லலாம். முடியாதவர்கள் வீட்டுக்கு வந்தவுடன் கைகளை நன்றாகக் கழுவிவிட்டு பயத்த மாவு, தயிர் கலந்து கையில் பூசி அரை மணி நேரம் ஊறவைத்துக் கழுவ வேண்டும். இதனைத் தொடர்ந்து சில வாரங்கள் செய்துவந்தால் நல்ல பலனைக் காணலாம். வாரக் கணக்கில் காத்திருக்க முடியாது. உடனடி பலனைக் காண வேண்டும் என்றால் புதினாவுடன் தயிர் கலந்து தொடர்ந்து பூசி வர நல்ல மாற்றத்தைக் காணலாம்.
வறண்ட சருமம் உடையவர்கள் இரவில் தூங்குவதற்கு முன்னால் சுத்தமான தேங்காய் எண்ணெயை, கை மற்றும் உடலில் தேய்த்துக் காலையில் குளித்தால் நல்ல மாய்ஸரைசர் உடலில் உண்டாகும். தோல் மினுமினுப்பாகும்.
கால் பராமரிப்பு
கால்களைப் பராமரிப் பதா எனச் சிலருக்குக் கேள்வி எழலாம். ஆம், நம் உடம்பில் முக்கியமான வேலை செய்யும் உறுப்பு கால்தான். நம் எடையைத் தாங்கி நம்மை நடக்கவைத்து, நிற்கவைத்து, உட்காரவைத்து எனப் பல வேலைகளில் முக்கியப் பங்கு வகிக்கும் கால்களை நன்றாகப் பராமரிக்க வேண்டும்.
பாத வெடிப்புக்கு
வெந்நீரில் சிறிது கல் உப்பு, சிறிது மஞ்சள் தூள் கலந்து கால் பாதங்களை அரை மணி நேரம் ஊறவைத்துப் பிறகு பியூமிக்ஸ்டோன் எனப்படும் கல்லால் வெடிப்புகளை நன்றாக அழுத்தித் தேய்க்க வேண்டும். பின்னர் நன்றாகத் துடைத்து, தேங்காய் எண்ணெயைக் கால்களில் தேய்த்துவிட்டுத் தூங்க வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்துவர வெடிப்பு காணாமல் போகும்.