நடிகர் விஜய், வெளிநாட்டில் இருந்து கடந்த 2012ஆம் ஆண்டு ’ரோல்ஸ் ராய்ஸ்’ என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காருக்கு தமிழக அரசு நுழைவு வரியை விதித்தது. இதை எதிர்த்து அவர் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் வழக்கை தள்ளுபடி செய்து, விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார். வரி செலுத்தாமல் வழக்குத் தொடர்ந்த அவரது செயலுக்கு கடும் கண்டனத்தையும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி எம்.துரைசாமி தலைமையிலான அமர்வு, தனி நீதிபதி தீர்ப்புக்குத் தடை விதித்தது. இதற்கிடையில், வரி மற்றும் அபராதத்தொகை இரண்டும் சேர்த்து நடிகர் விஜய் செலுத்த வேண்டும் என வணிகவரித்துறை உத்தரவிட்டது. நுழைவு வரி தொடர்பான வழக்கென நிலுவையில் உள்ளதால், வரி செலுத்த காலதாமதமானது என அபராதத்தொகையை ரத்து செய்யவேண்டும் என மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, வணிக வரித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வழக்கை அபராதத்துடன் ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான வாதங்கள் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் கடந்த மார்ச் 14ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் குமார், 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு முன் முழு நுழைவு வரியையும் செலுத்தியிருந்தால் அபராதம் விதிக்க கூடாது. ஜனவரிக்கு பின்னும் நுழைவு வரியை முழுமையாக செலுத்தியிருக்காவிட்டால் அபராதம் விதிக்கலாம் என வணிக வரித்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.