சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ’163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அவகாசம் நீட்டிக்கப்படுவதாகவும், CBSE முடிவுகள் வெளியாகும் நாளில் இருந்து அடுத்த 5 நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம் என்றும் இந்த அறிவிப்பு பொறியியல் கல்லூரிகளுக்கும் பொருந்தும். அரசு கலை – அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 3.64 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், தேவைக்கேற்ப கல்லூரிகளின் இடங்கள் 10% முதல் 15% வரை அதிகரிக்கப்படும். உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்துக்கு இதுவரை 2.2 லட்சம் மாணவியர் விண்ணப்பித்துள்ளதாகவும், கல்லூரிகள் திறக்கப்பட்டு ஒரு மாத காலத்துக்குள் திட்டம் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பொறியியல் கல்லூரிகளின் தரத்தை உயர்த்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், பொறியியல் கல்லூரிகளின் தரம் குறித்து அண்ணா பல்கலைக்கழக வல்லுநர் குழு ஆய்வு செய்து வருவதாகவும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.