நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து, பொருத்தம் பார்த்தால் போதும், திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்துவிடாதீர்கள். திருமணம் செய்வதற்கு சட்டரீதியிலான தகுதிகள் வேண்டும். ஆண் 21வயது நிரம்பியவராகவும், பெண் 18வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். திருமணம் செய்து கொள்ளும் ஆண், பெண் இருவரும் மனநிலை சரியுள்ளவர்களாக இருக்க வேண்டும். மணமக்கள் இருவரும் திருமணத்தின்போது வேறு திருமண பந்தத்தில் இருக்கக்கூடாது என்பதெல்லாம் அனைவருக்கும் தெரிந்த பொது விதிகள். இந்த விதிகளுக்கு உட்பட்டு திருமணம் செய்து கொள்பவர்கள் அதை முறைப்படி பதிவு செய்துகொள்ள வேண்டும் என்பது அரசு உத்தரவு. இதற்காகப் பல்வேறு சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.
இந்து திருமண சட்டம் 1955
இச்சட்டம் இந்துக்கள், ஜைனர்கள், பௌத்தர்கள் மற்றும் சீக்கியர்களுக்கும் பொருந்தும். இந்த சட்டத்தின்படி திருமணம் செய்து கொள்ளும் மணமக்கள் இருவரும் ஒரே மதத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். திருமணம் தடை செய்யப்பட்ட நெருக்கமான உறவு முறைக்குள் இருக்கக்கூடாது. அவர்கள் சார்ந்த சமூகத்தின் பழக்கவழக்கப்படி சடங்குகளை செய்து மணம் முடித்துக் கொள்ள வேண்டும். பொதுவாக ‘சப்தபதி’ அதாவது ஓமகுண்டத்தைச் சுற்றி ஏழாவது அடியை முடிக்கும் போது திருமணம் முடிவடைந்ததாக கருதப்படுகிறது.
கிறிஸ்தவ திருமணச் சட்டம் 1872
இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம் 1872 மற்றும் இந்திய விவாகரத்து சட்டம் 1869 ஆகியவை கிறிஸ்தவர்களுக்குப் பொருந்தும். இச்சட்டத்தின்படி, திருமணம் செய்து கொள்ளும் மணமக்களில் ஓருவரேனும் கிறிஸ்தவராக இருக்க வேண்டும். தேவாலயத்தில் அல்லது வெளியிடங்களில் கிறிஸ்தவ மதச்சடங்குகளை அனுசரித்து ஆலயப் பாதிரியார்கள் இவர்களுக்குத் திருணம் செய்து வைக்கலாம். மாநில அரசால் நியமிக்கப்பட்ட கிறிஸ்தவ திருமணப் பதிவு அதிகாரிகள் முன்பு, திருமணத்தை பதிவு செய்து கொள்ளலாம். இப்படி திருமணம் செய்து கொள்பவர்கள் எழுத்து மூலம் அறிக்கை கொடுக்க வேண்டும். இருசாட்சிகள் முன்னிலையில் நிகழும் திருமணத்தில், மணமக்களில் ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க வேண்டும். கிறிஸ்தவ திருமணங்கள் எங்கு நடந்தாலும் பதிவேடுகளில் பதிவு செய்யப்படுகிறது. இந்தப் பதிவின் சான்று மணமக்களுக்கு கொடுக்கப்படுகிறது.
முஸ்லிம் திருமணங்கள்
முஸ்லிம் திருமணங்கள் ஒரு ஒப்பந்தமாகவே கருதப்படுகிறது. திருமணத்தை ‘நிக்கா’ என்றும், திருமண ஒப்பந்தத்தை ‘நிக்காநாமா’ என்றும் படிவத்தில் பதிவு செய்கிறார்கள். இத்திருமணத்தின் போது ஒரு தரப்பினர் திருமணத்தை முன்மொழிய வேண்டும். இன்னொரு தரப்பினர் இதை ஒத்துக்கொள்ள வேண்டும். இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெற வேண்டும்.
திருமணத்தின்போது மணமகளுக்கு மணமகனால் ஒரு குறிப்பிட்ட தொகை கொடுக்கப்படும். இதற்கு ‘மொஹர்’ என்று பெயர். இந்த மொஹர் தொகை திருமணப்பதிவேட்டிலும், நிக்காநாமாவிலும் எழுதி வைக்கப்படும்.
சிறப்பு திருமணச் சட்டம்
மதத்தின் அடிப்படையில் இல்லாமல் எந்தமதத்தை, சாதியை சேர்ந்தவராக இருந்தாலும் எந்தவித தங்கு தடையும் இல்லாமல் சிறப்புத் திருமணம் செய்து கொள்ளலாம். இந்த சட்டப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பும் மணமக்கள், தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள திருமணப் பதிவாளரிடம் பெயர், வயது, முகவரி ஆகிய விபரங்களுடன் திருமண அறிவிப்பைக் கொடுக்க வேண்டும். அப்படி அறிவிப்பு கொடுப்பவர் 30நாட்களுக்கு முன், அந்தப் பதிவாளர் அலுவலகம் இருக்கும் பகுதியில் குடியிருந்திருக்க வேண்டும். அந்த அறிவிப்பை பொதுமக்கள் பார்க்கக்கூடிய இடத்தில் பதிவாளர், பார்வைக்கு வைப்பார்.
இத்திருமணத்திற்கு ஆட்சேபம் தெரிவிப்பவர்கள், அறிவிப்பு வெளியிடப்பட்ட 30நாட்களுக்குள் பதிவாளரிடம் தெரிவிக்க வேண்டும். 30தினங்களுக்குள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கப்படவில்லை என்றால் பதிவாளர் திருமணத்தைப் பதிவு செய்யலாம். மணமக்களும், 3சாட்சிகளும் திருமணப் பதிவேட்டில் கையொப்பம் இட்டவுடன் திருமணம் பூர்த்தியாகிவிடும்.
சுயமரியாதை திருமணம்
மதச்சடங்குகள் இல்லாமல் செய்து கொள்ளும் திருமணமே சுயமரியாதை திருமணம் அல்லது சீர்திருத்த திருமணமாகும். சுயமரியாதை திருமணத்தை செல்லுபடி ஆக்குவதற்காக இந்து திருமணசட்டம் 7ஏஇல் திருத்தம், 1967இல் கொண்டுவரப்பட்டது. நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் சுயமரியாதை திருமணம் செய்து கொள்ளலாம். மணமக்கள் தாம் ஒருவரை கணவன் அல்லது மனைவியாக ஏற்றுக்கொள்கிறோம் என்று தனக்குத் தெரிந்த மொழியில் உறுதிமொழி ஏற்க வேண்டும். வேறு சடங்குகள் அவசியமில்லை.
தமிழ்நாட்டில் உள்ள இந்துக்களுக்கு மட்டுமே இது பொருந்தும். பெரியவர்கள், உற்றார் உறவினர்கள் முன்னிலையில் உறுதிமொழி எடுத்தும் சுயமரியாதை திருமணம் செய்து கொள்ளலாம்.
பொது சிவில் சட்டம் என்றால் என்ன?
இந்தியா மதசார்பற்ற நாடு. இந்து, இஸ்லாம், கிருத்துவம், சீக்கியம் மற்றும் புத்த மதங்களைப் பின்பற்றும் பலதரப்பட்ட மக்களுக்கான ஒரே சட்டக் கொள்கைகளுக்கு வழி அமைத்து தருவதே பொது சிவில் சட்டம் எனப்படும். இந்த சட்டத்தினை முறையாகக் கையாளும் வழி குறித்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 44ஆவது ஷரத்து பரிந்துரை செய்கிறது. திருமணம், விவாகரத்து, வாரிசு, சொத்துரிமை, தத்தெடுத்தல், ஜீவனாம்சம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்தச் சட்டங்கள் தெளிவுபடுத்துகிறது.
எந்தெந்த பிரிவுகளில் இந்திய பொது சிவில் சட்டத்தை ஏற்கனவே நடைமுறைப்படுத்துகிறது?
இந்திய ஒப்பந்தச் சட்டம், சிவில் நடைமுறைக் குறியீடு, பொருட்கள் விற்பனைச் சட்டம், சொத்து பரிமாற்றச் சட்டம் ஆகிய சட்டங்கள் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாகப் பின்பற்றப்படுகிறது. மத்திய அரசு சார்பில் இருந்து இந்த சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், மாநில வாரியாக சில இடங்களில் திருத்தங்கள் மேற்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படுகிறது. சமீபத்தில் இந்தியா முழுமைக்குமான மோட்டார் வாகனச் சட்டத்திற்கு சில மாநிலங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்தன. கடந்த ஆண்டு தான் சட்ட ஆணையம் பொது சிவில் கோட் இந்தியாவிற்கு சாத்தியமற்றது என்று அறிவித்திருந்தது. சட்டத்தை உருவாக்கியவர்கள் அனைவருக்குமான ஒரே சட்டம் வேண்டும் என்று நினைத்திருந்தால், பாராளுமன்றத்தில் அதற்கான வரம்பினை வழங்கியிருப்பார்கள். ஆனால் தனிப்பட்ட சட்டங்கள் கான்கரண்ட் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
ஒரு தனிப்பட்ட மதத்தின்கீழ் இருக்கும் அனைத்துப் பிரிவுக்கும் ஏற்ற வகையில் ஒரே மாதிரியான தனிப்பட்ட சட்டம் உள்ளதா?
அனைத்து இந்துக்களும் ஒரே மாதிரியான சட்டத்தின்கீழ் கொண்டு வரப்படுவதில்லை. அதே போன்றுதான் முஸ்லிம் மற்றும் கிறித்துவ மதங்களைப் பின்பற்றும் மக்களும். ஆங்கிலேய மரபுகளில் மட்டுமல்ல, சில போர்த்துக்கீசிய மற்றும் ஃப்ரெஞ்ச் பாரம்பரியத்திலும் சில பகுதிகள் இந்தியாவில் செயல்பட்டு வருகிறது.
ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி, 2019 ஆம் ஆண்டு வரை மத்திய இந்து சட்டங்களுக்கு மாறாக இருந்தது ஜம்மு-காஷ்மீரில் செயற்பட்டு வந்த இந்து சட்டங்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு ஷரியத் சட்டம் 1937 ஜம்மு-காஷ்மீர் வரை நீட்டிக்கப்பட்டாலும், பின்பு அது ரத்து செய்யப்பட்டடது. காஷ்மீரில் இருக்கும் இஸ்லாமியர்கள் தனித்துவமான ஒரு சட்டத்தின் கீழ் இயங்கி வருகிறார்கள். இது இந்தியாவில் இருக்கும் பல்வேறு இஸ்லாமியர்கள் பின்பற்றும் சட்டங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை. இஸ்லாமியர்களின் திருமணப் பதிவு முறைகளும் இடத்திற்கு இடம் வேறுபடுகிறது. காஷ்மீரில் திருமணப் பதிவு கட்டாயம் (1981 Act) பீகார், அசாம், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் கட்டாயம் இல்லை. விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.
வடகிழக்கு மாநிலங்களில் 200க்கும் மேற்பட்ட பழங்குடியினர் வாழ்கின்றனர். அவர்கள் தங்கள் சொந்த சட்டங்களைக் கொண்டுள்ளனர். நாகாலாந்தில் மாநிலத்தில் உள்ள உள்ளூர் பழக்கவழக்கங்களை இந்திய அரசியல் அமைப்பு சட்டமே பாதுகாக்கிறது. இதேபோன்ற பாதுகாப்புகளை மேகாலயா மற்றும் மிசோரம் மாநிலங்கள் அனுபவிக்கின்றன. சீர்திருத்தப்பட்ட இந்து சட்டம் கூட பலதரப்பட்ட மக்கள் மத்தியில் நிலவும் பழக்க வழக்கங்களைப் பாதுகாக்கிறது.
பொது சிவில் சட்டம், அடிப்படை உரிமைகளுடன் எப்படித் தொடர்பினை உருவாக்குகிறது?
சட்டம் 25 தனி மனிதர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கிறது. சட்டம் 26 (பி) ஒவ்வொரு மதம் மற்றும் இனம் தங்களின் மதம் சார்ந்த பிரச்சனைகளையும் விவகாரங்களையும் நிர்வாகிக்க உரிமை அளிக்கிறது. சட்டம் 29, தனித்துவம் வாய்ந்த கலாச்சாரத்தினைப் பாதுகாக்க வழிவகை செய்கிறது. சட்டம் 25இல் தனி மனிதரின் மத சுதந்திரம் என்பது, பொது ஒழுங்கு, சுகாதாரம், மற்றும் அறநெறியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. அரசியல் அமைப்பு சபையில் அடிப்படை உரிமைகளில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருந்தது. அந்த விவகாரம் வாக்கெடுப்பு நடத்தி தீர்த்துக் கொள்ளப்பட்டது. சர்தார் வல்லபாய் படேல் தலைமையிலான அடிப்படை உரிமைகள் துணைக்குழு இந்த வாக்கெடுப்பினை நடத்தியது. அதில் 5:4 என்ற விகிதத்தில் மத சுதந்திரத்தை விட சீரான சிவில் கோட் முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை என்று வாக்கெடுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.