கடந்த ஜூன் 23 ஆம் தேதியன்று நடந்த பொதுக்குழுவிற்கு தடைக்கோரி முன்னதாக அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க மறுத்து வழக்கு ஜூலை 11ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கை விசாரித்த நீதீபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரால் தனித்தனியாக கையெழுத்திடப்படு, இறுதி செய்யப்பட்ட 23 தீர்மானங்களை பொதுகுழுவில் முன்வைத்து, அவற்றில் எந்த முடிவையும் எடுக்கலாம் என்றும், மற்ற விவகாரங்களை ஆலோசிக்கலாமே தவிர முடிவெடுக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டு, வழக்கு ஜூலை 19ஆம் தேதிக்கு தள்ளிவைப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஜூன் 23 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டதுடன், அவைத் தலைவரை நியமனம் செய்து, அடுத்த பொதுக்குழு ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைப்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து மேல்முறையீடு வழக்கு தொடுத்த சண்முகம், மூன்று கூடுதல் மனுக்களை தாக்கல் செய்திருந்தார். அதில், நிரந்தர அவைத் தலைவரை நியமித்து தீர்மானத்தை நிறைவேற்றப்பட்டதை, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாக கருதி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரை தண்டிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இத்துடன், இவர்களை தண்டிக்கும் விதமாக மேல்முறையீடு வழக்கில் பொதுக்குழு உறுப்பினர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்க்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. அவைத் தலைவர் தேர்வு செய்யப்பட்டதே செல்லாது என்பதால், அவர் அறிவித்த அடுத்த பொதுக்குழு கூட்டம் குறித்த அறிவிப்பு செல்லாது என்று, ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று கூடுதல் மனுக்களையும் அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில், பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தரப்பில் கடந்த வாரம் முறையீடு செய்யப்பட்டது. அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் அந்த கூடுதல் மனுக்கள் இரு நீதிபதிகள் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, 23 தீர்மானங்களை தவிர மற்ற முடிவுகளை எடுக்கக்கூடாது என்று கூறியது இடைக்கால உத்தரவு மட்டுமே. அது, கடந்த ஜூன் 23 ஆம் தேதியன்று நடந்த பொதுக்குழுவிற்கு மட்டுமே பொருந்தும். அதன் பின் நடக்கும் பொதுக்குழுக்களுக்கு அல்ல. எனவே, அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கோர முடியாது. ஜூலை 11ஆம் தேதி அதி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி தனி நீதிபதியை அணுகும் படி ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் கூறி உள்ளது. மேலும் வழக்கை ஒத்திவைக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு கேட்டுக்கொண்டதற்கு இணங்க நீதிபதிகள் வழக்கை 7ஆம்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர். அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக வரும் 7ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.