அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதால் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10.75 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதமாக மத்திய அரசு உயர்த்தி நேற்று உத்தரவிட்டிருந்தது. இதன் எதிரொலியாக வாரத்தின் இறுதி நாளான இன்று (ஜூலை 2ஆம் தேதி) தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.38 ஆயிரத்து 336க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.7 உயர்ந்து ரூ.4 ஆயிரத்து 792க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி கிராமுக்கு ரூ.1.5 குறைந்து ரூ.63.50 காசுகளுக்கு விற்பனையாகிறது. முன்னதாக நேற்று ஒரே நாளில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.107 உயர்ந்து ரூ.4 ஆயிரத்து 785க்கும், 22 கேரட் ஒரு சவரன் (8 கிராம்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.856 உயர்ந்து ரூ.38 ஆயிரத்து 280க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.