விவசாயிகள் போராட்டத்தின் பின்னணி
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
என்ற வள்ளுவரின் வரிகள் தற்போது மாறி, உழுதுண்டு வாழ்வோர் என்றும் தொழுதே வாழ்வர் என்றாகிவிட்டது.
விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு என்பதினாலேயோ என்னமோ நாம் அதைத் திரும்பிப் பார்ப்பதில்லை. எல்லா தொழில்களிலும் எந்த அளவு ஆபத்து இருக்கிறது என அறிந்தே களத்தில் இறங்குவோம். ஆனால் விவசாயத்தில் எதையும் கணிக்கமுடியாமல் கலப்பையைப் பிடிக்கிறான் விவசாயி. மழை அதிகம் பெய்தாலும் ஆபத்து , மழையே இல்லாவிட்டாலும் ஆபத்து. தற்போது தலைநகர் டெல்லியில் பல லட்சம் விவசாயிகள் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளுக்கு நன்மை தரவே வேளாண்மை சட்டங்கள் என மத்திய அரசு கூற, ஏன் இத்தனை விவசாயிகள் போராட்டம் புரிய வேண்டும்? அப்படி அந்த 3 சட்டங்கள் என்னதான் கூறுகிறது? உண்மையில் அந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை தருமா? விவசாயிகளின் கோரிக்கைதான் என்ன?
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் மூன்று முக்கிய மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்தது.
1. விவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் வசதி) மசோதா 2020.
2. விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) 2020.
3. அத்தியாவசியப் பொருட்கள் மசோதா 2020.
எந்த ஒரு மாநில அரசு மற்றும் விவசாயிகள் ஆணையத்திடமும் கருத்து கேட்காமல் மத்திய அரசு உடனடியாக இந்தச் சட்டத்தைக் கொண்டுவரக் காரணம் என்ன என்பது புரியாத புதிராகவே உள்ளது. இந்த மூன்று மசோதாக்கள் மூலம் நாடுமுழுவதும் விவசாயிகள் இ- வணிகம் மூலம் எங்கு வேண்டுமானாலும் தன் விளைச்சல்களை விற்கலாம். அதுமட்டும் இன்றி விவசாயிகள் தங்கள் விளைச்சலைப் பெரிய கம்பெனிகளுக்கு கான்ட்ராக்ட் மூலம் விற்கலாம் . ஆனால் இதில் பிரச்சனை என்னவென்றால் நம் நாட்டில் உள்ள விவசாயிகளில் 86% குறுநில விவசாயிகள். அவர்களால் கார்ப்பரேட் கம்பெனிகளுடன் கான்ட்ராக்ட் வைத்துக்கொள்வது என்பது சாத்தியம் இல்லாத ஒரு செயல். அப்படியே வைத்துக்கொண்டாலும் ஒரு சில காலங்களுக்குப் பின் அந்த கார்ப்பரேட் கம்பெனிகளே அவர்கள் நிலத்தை தன்னகப்படுத்திக்கொள்ளப்பெரிதும் வாய்ப்புள்ளது.
இப்போராட்டத்திற்கான முக்கிய காரணமாக இந்த சட்டத்தில் உள்ள MSP எனப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலை (minimum support price) யைக் குறித்து சொல்லப்படுகிறது. இந்திய உணவுக்கழகம் ஒரு குறைந்தபட்ச விலைக்கு விளைச்சல்களை எடுத்துக்கொள்ளும். விவசாயிகள் தங்கள் விளைச்சலை இந்திய உணவுக் கழகத்திற்கு தருவது கட்டாயம் இல்லை. தான் நினைத்த விலைக்கு சந்தையில் விளைச்சலை விற்கமுடியாமல் போகும்பொழுது விவசாயிகள் இந்திய உணவுக் கழகத்திடம் விற்கலாம். இதுவே MSP எனப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலை (minimum support price). இந்தச் சலுகை புதிய விவசாய மசோதாவில் குறிப்பிடப்படாததால், இதனை ஒரு திருத்தமாக வைக்ககோரி விவசாயிகள் கேட்க அதனை வாய்வார்த்தையில் உறுதி கூரும் அரசு சட்டத்தில் கொண்டுவரத் தயங்குகிறது.
டெல்லியில் கூடிய விவசாயிகளில் பெரும்பான்மையானோர் பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த விவசாயிகள் .பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலையை நம்பியே உள்ளனர்.
இந்த மசோதாவில் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் சில திட்டங்களும் உண்டு. விவசாயிகளிடம் பொருட்களை வாங்கும் நபரோ நிறுவனமோ மூன்று நாட்களுக்குள் அதற்கான விலையை விவசாயிகளிடம் கொடுத்தே ஆகவேண்டும்.
அதேபோல் அத்யாவசிய உணவுப்பொருட்கள் (அரிசி, பருப்பு, வெங்காயம், உருளைக் கிழங்கு…) முதலிய பொருட்களின் விலை குறைவாக இருந்தால் அதனைப் பாதுகாத்து வைத்துகொண்டு விலை உயர்வின்போது விற்பது விவசாயிகளின் விருப்பம் என்பதும் விவசாயிகளுக்கு நன்மைதரும் விஷயமே.
சில நோக்கங்கள் நல்லதாக இருந்தாலும் அதை விவசாயிகளிடம் கலந்து ஆலோசிக்காமல் அவசர அவசரமாக நிறைவேற்றியதில்தான் பிரச்சனை வெடித்துள்ளது.
இந்தப் போராட்டத்தி னால் பெரு மளவு இழப்புகள் ஏற்பட்டுள்ளது.
இந்த உரிமைப் போராட்டத்தில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளனர் .
பஞ்சாப், ஹரியானா மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் தினமும் 3500 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
சிறு,குறு விவசாயிகளுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை 2000ரூபாய் என ஆண்டிற்கு 6000 ரூபாய் என வழங்கப்பட்ட நிதி உதவியைப் பெரும்பாலும் தகுதியில்லாதவரே பெற்றனர். இப்படி விவசாயிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளிலும் விவசாயிகளுக்கு அமைக்கப்படும் திட்டங்களிலுமே பல பிரச்சனைகள் உருவாகின்றன.
நம் நாட்டின் ஜிடிபி பெரும்பாலும் விவசாயத்தை சார்ந்தே உள்ளது. ஆகவே விவசாயம் பாதிக்கப்பட்டால் நம் நாடு பொருளாதார ரீதியாகப் பெரிதும் பாதிக்கப்படும். மக்களுக்கான ஆட்சியாக மக்களாட்சி மாறினால் மட்டுமே இத்தகைய போராட்டங்களைத் தவிர்க்க முடியும்.