மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா கட்சி ஆட்சி மீது அதிருப்தி அடைந்துள்ள 50 எம்.எல்.ஏ.,க்கள் அசாம் மாநிலம் கெளகாத்தியில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர். இதனால், உத்தவ் தாக்ரே அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் கோய்ஹாரி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், கெளகாத்தியில் உள்ள காமாக்யா கோவிலில் வழிபாடு நடத்திய பின்னர் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களின் தலைவராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே, ”நாளை நடைப்பெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க மகாராஷ்டிரா செல்லவுள்ளதாக” தெரிவித்துள்ளார். அதேசமயம், பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டுள்ளதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிவசேனா கட்சியின் சட்டமன்ற கொறடா சுனில் பிரபு சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அதில், 16 எம்.எல்.ஏ.,க்களின் தகுதிநீக்க வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு சரியானதல்ல என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.