2022ஆம் ஆண்டுக்கான உதவி ஆய்வாளர் பதவிகளுக்கு தமிழ் மொழி தகுதித்தேர்வு மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வுகளை அனைத்துப் பிரிவு விண்ணப்பதாரர்களுக்கும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய இயக்குனரகம் இன்று நடத்தியது. தமிழகம் முழுவதும் மொத்தம் 444 உதவி ஆய்வாளர்களைத் தேர்வு செய்வதற்காக இன்று 39 மையங்களுக்குட்பட்ட 197 இடங்களில் 2.21 லட்சம் பேர் முகக்கவசம் அணிந்து தேர்வில் பங்கேற்றுள்ளனர். காலை 10 மணி முதல் பகல் 12. 30மணி வரை முதன்மை எழுத்துத் தேர்வும், பகல் 3.30 மணி முதல் மாலை 5.10 மணி வரை தமிழ் மொழி தகுதித்தேர்வும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வை 43 திருநங்கைகள், 43 ஆயிரத்து 949 பெண்கள் உட்பட 2 லட்சத்து 21ஆயிரத்து 213 பேர் இன்று எழுதுகின்றனர். தேர்வு நடக்கும் 197 இடங்களிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதுடன், வினாத்தாள் மற்றும் தேர்வுத் தாள்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டு, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய இயக்குனரகத்தில் இருந்து வாகனங்களின் இயக்கத்தை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல நாளை காலை 10 மணி முதல் 1 மணி வரை முதன்மை எழுத்துத் தேர்வு காவல்துறை விண்ணப்பதார்களுக்கு நடத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.