வாழ்க்கைப் பயணத்தில் ஆண் களுக்கு உறுதுணையாக நிற்கும் ஒவ்வொரு பெண்ணுக் குள்ளும் பல பிரத்யேகத் திறமை கள் புதைந்திருக்கின்றன. அந்தத் திறமைகளை அடையாளம் கண்டு அவற்றை வெளிக்கொணர்வதற்கான சூழ்நிலை உருவாக்கப்படுவதுதான் பெண்கள் முன் னேற்றத்தின் அடிப் படையாகும்.
இந்தியாவில் பெண்களின் முன்னேற்றம் என்பது பெரியோர்களின் வளர்ப்பு முறையில் வெளிப்படுகிறது. பெண் குழந்தைகளை வீட்டுவேலை செய்யவும், ஆண் குழந்தைகளிடம் பொருளாதாரம் பற்றிப்பேசியும் உற்சாகப்படுத்தினார்கள். குடும்பத்தின் பொருளாதார நிர்வாகத்தில் ஆண்கள் பொறுப்பேற்பதையே விரும்பினார்கள். பலதலை முறைகளாக இந்த நிலை தோற்றுவித்ததால் பெண்களுக்கு பொருளாதார நிர்வாகத்தில் சம்பந்தமில்லை என்ற மனத்தடை இருக்கிறது.
பெண்களின் முன் னேற்றத்திற்குக் குடும்ப அங்கத்தினர்கள் எதிர்ப்பு, கலாச்சாரம், மதக்கோட்பாடு, ஆண்களின் ஆதிக்கம் மற்றும் பொருளாதாரப் பற்றாக்குறை ஆகிய பல காரணிகள் பங்கு வகிக்கின்றன. பெண்கள் முன்னேற்றம் என்பது அவ்வளவு எளிதாக சாதிக்கக்கூடியது அல்ல. சமீபகாலங்களில் பெண்களின் முன்னேற்றம் என்பது நிகழ்ந்து கொண்டிருந்தாலும் பல தடைக் கற்களால் அந்த நிகழ்வின் வேகம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.
எப்பேர்ப்பட்ட தடைக்கற்களையும் உடைத்தெறியும் சக்தி பெண்களுக்குண்டு. இதில் முக்கியமாக பெண்களுக்குரிய அடிப்படை அதிகாரமும் அங்கீகாரமும் வழங்குவதுதான். அதிகாரத்தின் முக்கியப்பகுதி பெண்களுக்கான கல்வி அறிவு ஆகும்.
குடும்பத்திலும், சமூகத்திலும் தங்கள் உரிமைகளையும், சலுகைகளையும் பற்றி புரிந்து செயல்பட கல்வியறிவு பெண்களுக்குப் பெரிதும் உதவும். அதே நேரத்தில் பெண்கள் சமூக கோட்பாடுகளுக்கு உட்பட்டு தாங்கள் கற்ற கல்விக்கு ஏற்ற திறமைகளை வெளிப்படுத்த முடியாமல், குடும்பத்திற்குள்ளேயே கட்டுண்டுவிடும் கட்டாயச் சூழ்நிலைகள் இன்றும் நிலவுவது வருந்தத்தக்கது. பெண்களின் முடக்கப்பட்ட திறமைகள் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெருத்த நஷ்டமாகும்.
சமீபத்தில் சர்வதேச நிதியம் (IMF) “ஆண் ஊழியர்களின் எண்ணிக்கைக்கு சமமாகப் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை உயரும்போது அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி ) 5 சதவீதமும் இந்தியாவில் 27 சதவீதமும் உயரும் எனக் கணித்துள்ளது.
பெண்கள் முன்னேற்றம் என்பது உலக நலனுக்கு மிக முக்கியமான காரணி. ஒரு இறக்கை உடைய பறவையால் பறந்து சாதிக்க முடியாது என்று பெண்ணினத்தின் முக்கியத்து வத்தை தெளிவாகப் பதிவிட்ட சுவாமி விவேகானந்தரின் கூற்றில் உள்ள உண்மையை உணர்ந்து பெண்களை அனைத்து துறையிலும் பயன்படுத்தி வளர்ச்சி காண வேண்டும்.
பொருளாதார சுதந்திரம் என்பது பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல; சுயமரியாதை, தன்னம்பிக்கை, அதிகாரமளித்தல், வளர்ச்சி என அனைத்திலும் அடங்கும். பொருளாதார சுதந்திரம் இல்லாத பெண்ணின் வாழ்க்கை மிக மிக கடினமானது.
இந்தியாவில் தற்போது அனைத்து துறைகளிலும் பெண்கள் பணிபுரிகின்றனர். ஆண்கள்செய்யும் அனைத்து வேலைகளிலும் பெண்கள் சிறப்பாகப் பணி செய்கின்றனர். குறிப்பாக உயர்கல்வியை முடித்து வெளிவரும் பெண்களில் குறிப்பிட்ட சதவீதத்தினர் சொந்தமாகத் தொழில் துவங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சிறிய கடைகள் துவங்கி சிறு, குறு நடுத்தர நிறுவனங்களை ஆரம்பித்து நடத்தவும் பெண்கள் விரும்புகின்றனர். அவர்களின் வளர்ச்சிக்காக அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் சிறப்புத் திட்டங்கள் உள்ளன.
புதிய மற்றும் ஏற்கனவே செய்துவரும் தொழில் களுக்கு நடைமுறை மூலதனம், venture capital போன்றவை வழங்கப்படுகின் றன.
இந்திய அரசினால் துவங் கப்பட்ட ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் நம் நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளின் கிளைகளிலும் குறைந்தபட்சம் ஒரு தாழ்த்தப்பட்ட \ பழங்குடி வகுப்பைச் சார்ந்த அல்லது பெண்களுக்குப் புதிய தொழில்களைத் துவக்க 10 லட்சம் முதல் ஒரு கோடி வரை கடன் வழங்கப்படுகிறது . இத்திட்டத்தின் நோக் கம், பெண்களுக்குத் தொழில் துவங்க கடன் வழங்குதல் என்பதே. இக் கடன் பெற விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயதிற்கு மேற்பட்டவராக (பெண்) இருக்க வேண்டும். இத்திட்டத்தில் திட்ட மதிப்பில் தொழில் முனைவோர் உருவாக்க இருக்கும், வாங்கவிருக்கும் அனைத்து சொத்துக்களையும் முதன்மை பிணையாக வங்கிக்கு அளித்தல் அவசியம். அதுதவிர, இந்தக் கடனுக்காக எந்தவிதமான துணைப்பிணையும் (COLATERAL SECURITY) அல்லது தனி நபர் ஜாமின் போன்றவை கொடுக்கவேண்டிய அவசியமில்லை .
கனரா வங்கி பெண் தொழில்முனை வோரின் வளர்ச்சியில் மிக அதிக ஈடுபாட்டினைக் காட்டிவருகிறது. பெண் தொழில் முனைவோருக்கான பிரத்யேகமாக CEW (centre for entrepreneurship women ) என்கிற தனிப்பிரிவு உள்ளது . இதன் மூலம் தொழில் துவங்க ஆலோசனை மாதிரி திட்ட விவர அறிக்கை (project report) தயாரிப்பதில் ஆலோசனை, தேவையான கடனுதவித் திட்டங்களின் விவரங்கள் இவற்றுடன் பெண் தொழில் முனைவோர் மற்றும் சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்கள் சந்தைப்படுத்தவும் உதவுகின்றது. குறிப்பாக கனரா வங்கியில் பெண் தொழில் முனைவோருக்கு அனைத்து விதமான MSME திட்டங்களுக்கும் கடனுதவி செய்யப்படும். இதில் கூடுதல் சிறப்பாக அனைத்து மகளிருக்கும் கல்விக்கடனில் 0.50 சதவீதம் வட்டிசலுகையும் வீடு மற்றும் வாகன கடன்களில் 0.05 சதவீதம் இரட்டிப்பு சலுகை வழங்கி பெண்களைக் கௌரவிக்கிறது என்பது சிறப்பு.
இந்தியாவின் வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டதின் முக்கிய நோக்கமே அனைவருக்கும் வங்கித் திட்டங்கள் சென்றடைந்து, சமூகத்தில் உள்ள ஏற்றத் தாழ்வு நிலையைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதே. இதில் குறிப்பாக பெண்களின் வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு என்பது இன்றியமையாதது ஆகும்.
உயர்கல்வியை முடிக்கும் மாணவிகள் வேலை தேடாமல், வேலை கொடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தை மனதில் நிலைநிறுத்தவேண்டும். இதனால் அவர்களும் வளர்ச்சிப் பாதையில் பயணித்து மற்றவர்களுக்கும் புதிய வேலைவாய்ப்பினை வழங்கி, நாடு முன்னேற்றப் பாதையில் பயணிக்க தன்னால் இயன்ற பங்கினை வழங்கிட வேண்டும்.
பெண்கள் இணைந்தால், இந்தியாவின் வளர்ச்சி பன்மடங்காகப் பெருகும்.
-கனிமொழி, துணைப்பொதுமேலாளர், கனரா வங்கி, சென்னை