சென்னை மணலியில் உள்ள ஐ.ஓ.சி.எல். நிறுவனத்தின் விரிவாக்க பணிக்காக சவுடு மண் எடுப்பதற்கு இடம் தேர்வு செய்து தருமாறு தமிழக அரசுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் சென்னை மாதவரம் மஞ்சம்பாக்கம் ஏரியில் சவுடு மண் எடுப்பதற்காக ஐ.ஓ.சி.எல். நிறுவனத்திற்கு 3 ஏக்கர் 20 சென்ட் பரப்பளவில் இடம் ஒதுக்கப்பட்டது. அதற்கான பணியை ஐ.ஓ.சி.எல். நிறுவனம் தனியாரிடம் ஒப்படைத்து உள்ளது. இந்த நிலையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை தாண்டி சுமார் 20 ஏக்கர் பரப்பளவிற்கு மேல் சட்டவிரோதமாக 30 அடி ஆழத்திற்கு மண் அள்ளும் இயந்திரம் மூலம் குழிதோண்டி நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் தேவைக்கு அதிகமான சவுடு மண் அள்ளப்பட்டு கள்ள சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது மஞ்சம்பாக்கம் ஏரியில் ஐ.ஓ.சி.எல். நிறுவன விரிவாக்கப் பணிக்காக அரசு அனுமதியுடன் நடைபெற்றுவரும் சவுடு மண் எடுக்கும் பணியை நாள்தோறும் நேரடியாகச் சென்று பொதுப்பணித்துறை அலுவலர்கள் கண்காணித்து அள்ளப்படும் மண்ணின் அளவை பதிவேட்டில் தவறாமல் பதிவு செய்து உயரதிகாரிகளின் பார்வைக்கு அனுப்பி வருவதாகவும் எனவே இதில் முறைகேடு நடைபெற வாய்ப்பில்லை என தெரிவித்தனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் சர்ச்சைக்குரிய இந்த சவுடு மண் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு முறையான விசாரணை நடத்தி தவறு நடந்திருக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.