கல்வி.
அறியாமை என்னும் இருளைப் போக்கும் ஒளிச் சுடர்.
ஒரு ஆண் கல்வி பெருறும்பொழுது அவன் வளர்ச்சி அடைகிறான்.
அதுவே ஒரு பெண் கல்வி பெறும்பொழுது அவள் சுற்றமும் சமூகமும் அவளுடன் சேர்ந்து வளர்ச்சியடைகிறது.
ஒரு காலத்தில் பெண்கள் வீட்டைவிட்டு வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவர்களுக்குக் கல்வி அவசியமற்றதாய் கருதப்பட்டது. இன்றோ வெளியூர் சென்றும் வெளிநாடுகளுக்குச் சென்றும் பணிபுரிந்து தன் தந்தைமுதல் கணவன்வரை அனைவரையும் கவனித்துக்கொள்கின்றனர். இந்த வளர்ச்சிக்குக் காரணம் கல்வி.
இன்றளவில் வளர்ந்து வரும் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் தடம் பதிக்க ஆரம்பித்துவிட்டனர்.
பல துறைகளில் பெண்கள் வலம் வந்தாலும் விரல்விட்டு எண்ணும் அளவிற்கே பெண்கள் சாதிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
இந்தியா 2020இல் வல்லரசு ஆகவேண்டும் என்ற கலாமின் கனவு கனவாய்ப் போய்விடக் கூடாது. வெகுவிரைவில் இந்தியா வல்லரசாகும். அதற்குப் பெண்களின் பங்களிப்பு மிக இன்றியமையாதது. நம் நாடு வல்லரசு நாடாக வளர தொழில்நுட்பம் , உயிரியல் , வேதியல்,வேளாண்மை என அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற வேண்டும்.
போதுமான கல்வி அறிவு இருந்தாலொழிய பெண்கள் மேன்மை நிலை அடையமுடியாது. ஆனால் இன்றளவிலும் பெண்களைத் தொழில்நுட்பம் , விண்வெளி முதலிய துறைகளில் அனுப்ப அவர்களது பெற்றோர் தயங்குகிறார்கள்
இந்தியாவின் ஜிடிபியில் பெண்களின் பங்கு 17%. ஆனால் சீனாவின் ஜிடிபியில் சீனப்பெண்களின் பங்களிப்பு 40%. உலகிலேயே சீனப்பெண்கள்தான் அவர்கள் நாட்டின் ஜிடிபியில் பெரும் பங்களிக்கின்றனர். அதற்கு முக்கியமான காரணம், அவர்களுக்கு அளிக்கப்பட்ட கல்வி. சீனாவில் 90% பெண்களுக்குக் கல்வி அளிக்கப்படுகிறது. அதேபோல் இந்தியாவிலும் பெண்களுக்கு சிறந்த கல்வி வழங்கப்படவேண்டும்.
மண்ணைக்கிளரும் வேளாண்மைத்துறை முதல் விண்ணில் பறக்கும் விண்வெளித்துறை வரை அனைத்திலும் பெண்கள் சிறந்து விளங்கவேண்டும் அதற்குக் கல்வி இன்றியமையாதது. ஒரு பெண் கல்வி பெறுவது வீட்டுச் செலவிற்கு சம்பாதிக்கவும், குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் சொல்லிக் கொடுக்கவும் என சுருக்கிக்கொள்ளாமல் நாடு வளர்ச்சியடையவும் உலகம் மேம்படவும் உதவவேண்டும் .
உலகிற்குப் பயன்படாத கல்விபெற்று இறக்கை இருந்தும் பறக்க முடியாத வாத்து களாய் நாம் குளங்களில் தத்தளிக் காமல், அனைவருக் கும் பயன்படும் கல்வி தனைக் கற்று கழுகெனப் பறந்திடுவோம். உலகினை வென்றிடுவோம்.
-யோகலட்சுமி வேணுகோபால்