இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி ஐந்து டி20 போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டு இருந்தது. அதன்படி, இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று இரவு பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றது. முன்னதாக மழை பெய்ததன் காரணமாக ஆட்டம் தொடங்குவதற்கு 50 நிமிடங்கள் தாமதமானது. பின்னர் இரவு 7.50 மணிக்கு மழை நின்ற பிறகு ஒரு ஓவர் குறைக்கப்பட்டு 19 ஓவர் மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டு ஆட்டம் தொடங்கியது. இந்தத்தொடரில் முதல் 4 போட்டிகளில் டாஸ் வென்றது போலவே, இந்த போட்டியிலும் தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து, முதலில் களம் இறங்கி இந்திய அணி நான்காவது ஓவரில் விளையாடிக்கொண்டு இருக்கும்போது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதைத்தொடர்ந்து தொடர் மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே விளையாடிய நான்கு போட்டிகளில் இரு அணிகளும் 2-2 என்ற எண்ணிக்கையில் சமநிலை பெற்று இருந்ததால், அதனைத்தொடந்து, இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. மழை காரணமாக போட்டியை நேரில் காண வந்த ரசிகள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். இந்த நிலையில், போட்டியை காண வந்த ரசிகர்களின் டிக்கெட் கட்டணம 50 சதவிகிதம் திருப்பி அளிப்பதாக கர்நாடக கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.