திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் அருகே உள்ள கரிக்கலவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (24). அவரது மனைவி அர்ச்சனா (23). இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் திருவள்ளூரில் உள்ள மீரா திரையரங்கில் இருந்து நேதாஜி சாலையில் சென்றுகொண்டு இருக்கும்போது திடீரென அவர்களது வாகனத்தில் புகை வரவே அதிர்ச்சி அடைந்த தம்பதியர் உடனடியாக வாகனத்தை விட்டு கீழே இறங்கி உள்ளனர். புகையைத் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் தீ பற்றிக்கொண்டதால், அருகில் இருந்தவர்களின் உதவியுடன் தண்ணீரை ஊற்றி இருசக்கர வாகனத்தின் தீயை அணைக்க முயற்சித்துள்ளனர். இருப்பினும் தீ மளமளவென பற்றி இருசக்கர வாகனம் முழுவதும் எரிந்ததால் இதுகுறித்து திருவள்ளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் இருசக்கர வாகனம் முற்றிலும் தீக்கிறையானது. சாலையில் சென்றுகொண்டு இருக்கும்போதே புத்தம் புதிய இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்ததில் கணவன் மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.