பூமியே என் கனவு
முளைத்து மூன்று இலை விடுவதற்குள் பண்டைக்கால அம்சங்களைத் தோண்டி எடுத்து விவரிக்க ஆரம்பித்து விடுகிறார், அஸ்வதா. 13 வயதிலேயே இவர் உலகின் இளம் தொல்லுயிரியலாளர். பல விருதுகளைத் தன் அலமாரியில் குவித்து வைத்திருக்கிறார் இந்தச் சின்னப் பெண். பல பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று தொல்லுயிரியலின் ஆய்வுகளை இவர் விளக்கி வருகிறார். ஆர்வம் இருந்தால் எந்த வயதிலும் சாதனை படைக்கலாம் என்பதை நிரூபித்துள்ளார், எட்டாம் வகுப்பு படிக்கும் இந்தக் குட்டித் தாரகை.
பல கோடி வருடங்களுக்கு முன்பு புதைந்துபோன உயிரினங்களின் புதைபடி மங்களைப் பற்றிப் படிப்பதே தொல்லுயிரியல் ஆய்வு அல்லது புதைபடிவ ஆய்வியல். இதன் மூலம் நம் பூமியின் வரலாற்றை அறிந்து கொள்ள முடியும்.
‘எனது ஐந்தாம் வயதில் என்சைக்ளோபீடியாவில் அச்சிடப்பட்டிருந்த ஒரு புதைபடிவத்தைப் பார்த்தேன். ஆனால் அது புதைபடிவம் என்று அறியாமலே அதன்மீது ஆர்வம் கொண்டேன். எனது ஆர்வத்தைப் பார்த்த எனது பெற்றோர் எழும்பூர் அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு சென்று புதைபடிவங்களைப் பார்த்தபோது, அதன் மீது மீளா ஈர்ப்பு வந்தது’ என்று தனக்குத் தொல்லுயிரியல் மீது ஏற்பட்ட பேரார்வத்தை விளக்குகிறார் அஸ்வதா.
பதினோராவது வயதில் புதைபடிமங்கள் மீது தனக்கு வந்த ஆர்வம் தொல்லுயிரியலைச் சார்ந்தது என்று புரிந்து அதன் ஆழத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினார் அஸ்வதா.
அஸ்வதாவின் தந்தை ஒரு பொறியியலாளர். அவருடைய தாய், விரிவுரையாளராக இருந்து, ஒரு கதைசொல்லியாகப் பணிபுரிபவர். பள்ளி, கல்லூரிகளில், சமூக மையங்களில் அவர் கதை சொல்லும் கலைச் சேவை புரிகிறார். அம்மா சொல்லும் கதைகளில் இருக்கும் அறிவியல் ஆற்றலைத் தேட வேண்டும் என்று ஆர்வம் கொண்டாராம் அஸ்வதா.
அஸ்வதா முதுகெலும்பற்ற உயிரினங்களைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் வாழ்ந்த சில உயிரினங்கள் ஏதோ ஒரு வடிவில் பரிணாம வளர்ச்சி அடைந்து வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. மேலும் சில உயிரினங்கள் அழிந்துபோய்விட்டன. ‘அவை எப்படிப் பரிணாம வளர்ச்சி அடைந்தது என்பதைப் பற்றியும், எப்படி அழிந்தது என்பதைப் பற்றியும் ஆய்வு மேற்கொள்கிறேன்’ என்று தன் ஆய்வின் மையத்தை விளக்குகிறார் அஸ்வதா.
அஸ்வதா இதுவரை 120 புதைபடிமங்களைக் கண்டெடுத்திருக்கிறார். தான் கண்டுபிடித்த ஒவ்வொரு புதைபடிவமும், ஏதோ ஒரு வரலாறு அல்லது புவியியல் பதிவால் புதைக்கப்பட்டிருக்கிறது என்கிறார் அவர்.
புதைபடிமங்கள் குறிப்பிட்ட இடத்தில்தான் கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது. அதனால் அலைச்சல் இருக்கும். மேலும் மாலை 6 மணிக்கு மேல் ஆய்வு செய்யும் இடத்தில் இருக்க முடியாது. ஏனென்றால் அங்கு எந்த வகையான உயிரினங்கள் இருக்கும் என்றே தெரியாத சூழல் இருக்கும். நிலச்சரிவான இடங்களில் தான் அதிகளவில் புதைபடிமங்கள் இருக்கும். அதனால் சில நேரங்களில் நிலச்சரிவுகளும் ஏற்படும். ’எல்லாம் தாண்டித்தான் ஆய்வுகளை மேற்கொள்ள முடியும்’ என்று உறுதியுடன் கூறுகிறார் அவர்.
‘புதைபடிமங்களைக் கண்டெடுத்தவுடன் அதனை நன்றாகச் சுத்தம் செய்துவிடுவேன். பின்னர், பெட்டிகளில் பெர்ன்(fern) தாளை அடுக்கி அதில் புதைபடிமங்களைப் பாதுகாத்துக் கொள்வேன். அதனால் வானிலை மாற்றத்தினால், அப்புதைபடிமங்களுக்கு எதுவும் நேராது’ என்று தன் புதையல்களைப் பத்திரப்படுத்துவதைப் பற்றிக் கூறுகிறார் அவர்.
தான் சேகரித்த புதைபடிமங்களைக் கொண்டு தன் அறையிலேயே சிறு அருங்காட்சியகத்தை உருவாக்கி இருக்கிறார் அஸ்வதா.
பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று பல்வேறு கருத்தரங்குகளில் அஸ்வதா கலந்துகொள்கிறார்
‘எனது அனுபவத்தின் வாயிலாகத் தொல்லுயிரியல் எவ்வகையான பாடப்பிரிவு என்பதை மாணவர்களுக்கு விளக்குவேன். நம் பூமி எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்தது என்பதைப் பற்றியும், நாம் ஏன் தொல்லியலைக் காப்பாற்ற வேண்டும் என்பதைப் பற்றிய ஆழமான கருத்தை உணர்த்துகிறேன். அது பல இளைஞர்களை இத்துறைக்கு ஆர்வத்தோடு வரச்செய்கிறது’ என்று நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார் அவர்.
டிஎன்ஏ(DNA) மூலமாகவும் உள் உயிரியல் மூலமாகவும், தொல்லுயிரியலில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தன் எதிர்காலக் கனவை நம்முன் விவரிக்கிறார் அவர்.
‘வருங்காலத்தில் தொல்லுயிரியலுக் கென்றே புதிய பாடப்பிரிவு வர வேண்டும். தொல்லுயிரியலுக்கு தேவையான தொழில்நுட்பங்களையும், உபகரணங்களையும் மேம்படுத்த வேண்டும்’ என்கிறார் அஸ்வதா.
இப்போது மக்களிடையே தொல்லுயிரியல் பற்றிய விழிப்புணர்வு வரத்துவங்கி இருக்கிறது. அரசாங்கமும் புதைபடிமங்களைப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ‘மேலும் மக்களை இத்துறைக்கு விரும்பி வரச் செய்வேன்’ என்று உரக்கச் சொல்கிறார் இவர்.
இளம் தொல்லியலாளராக மாநில ஆளுநரிடமிருந்து விருதினைப் பெற்றுள்ளார் அஸ்வதா. மேலும் டாக்டர் அப்துல் காலம் ஸ்டூடண்ட் விருது இவருக்குக் கிடைத்திருக்கிறது. Indian Book of Records (IBR), ‘Universal Achievers Book of Records’ ‘Wonder Book of Records,’ என்று பல அங்கீகாரங்கள் அவருக்குக் கிடைத்திருக்கின்றன. 2020க்கான Global child prodigy award விருதினைத் தன் வசப்படுத்தி இருக்கிறார் இவர் .
‘தொல்லுயிரியலாளராக எனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு விருதும் என் துறைக்கானது. எனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு விருதும் இத்துறை, மற்றவர்களைச் சென்றடைகிறது என்ற மகிழ்ச்சியைத் தரும். அது என்னை அடுத்த கட்டத்திற்கு இத்துறையைக் கொண்டு செலுத்துவதற்கான நம்பிக்கையை உருவாக்கிறது’ என்று கூறுகிறார் அஸ்வதா.
இன்றளவும் மண்ணுக்குள் புதைந்திருக்கும் கடந்த வாழ்வின் நெறிமுறைகளைக் கண்டறிய முயலும் இந்த இளம் தொல்லுயிரியலாளரின் முயற்சி, இவரை இத்துறையில் முன்னேற்றிச் செல்லும் என்பதில் ஐயம் இல்லை.
-அஸ்வதா