90-களில் பல கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகை விசித்ரா 19 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வெள்ளித்திரை பக்கம் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
கேள்வி: சினிமாவில் இருந்து திடீரென எஸ்கேப் ஆனதற்கான காரணம் என்ன?
பதில்: எஸ்கேப் எல்லாம் ஆகவில்லை, கால சூழ்நிலையால் சினிமா வாய்ப்புகளைத் தவிர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மைசூரில் நானும் எனது கணவரும் சொந்தமாக ரெஸ்டாரண்ட் நடத்தி வந்தோம். அதனை நிர்வகிக்கவே நேரம் போதவில்லை, கூடவே பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு இருந்தது. எனக்கு மொத்தம் மூன்று மகன்கள். மூத்தவர் இப்போது கல்லூரி செல்ல இருக்கிறார். மற்ற இருவரும் இரட்டையர்கள், அவர்கள் பள்ளியில் படித்து வருகின்றனர். ரெஸ்டாரண்ட் நிர்வாகம், பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ளுதல் என இத்தனை ஆண்டுகள் ஓடிவிட்டன.
கேள்வி: நீங்கள் நடித்துக் கொண்டிருந்த சீரியல் கூட நின்றுவிட்டதே, என்ன காரணம்?
பதில்: சன் தொலைக்காட்சியில் ஒளி பரப்பாகிய ‘ராசாத்தி’ சீரியலில் நடித்து வந்தேன். எல்லாம் நன்றாகச் சென்றது, அதற்குள் கொரோனா வந்துவிட்டதால் மொத்தக் குழுவும் முடங்கியது. பிறகு ஷூட்டிங் தொடங்கவிருந்த நிலையில் அதில் நடித்த ஹீரோ உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்கள் ஒரு சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இப்படித் தொடர்ந்து தடை மற்றும் தொலைக்காட்சியோடு போட்டுக்கொண்ட ஒப்பந்தம் எனப் பல காரணங்களால் ராசாத்தி சீரியல் துரதிர்ஷ்டவசமாக நின்று விட்டது.
கேள்வி: சரி, உங்களது அடுத்தகட்ட திட்டம் என்ன? திரைப்படம் பக்கம் மீண்டும் பார்க்க முடியுமா?
பதில்: கூடிய விரைவில் என்னைத் திரைப்படங்களில் நீங்கள் பார்க்கலாம். நல்ல கதாபாத்திரங்கள் வருகின்றன. இப்போது கூட இயக்குநர் கவுதம் மேனனின் ‘ஜோஷ்வா’ என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறேன். இது மட்டுமல்லாமல் உலகமே டிஜிட்டல் மயமாகி வருவதால் வெப் சீரிஸ்களிலும் நடிப்பதற்கு வாய்ப்புகள் வருகின்றன. கதை மற்றும் கதாபாத்திரத்திற்க்கு இப்போது அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன்.
கேள்வி: மீண்டும் நடிக்க வருகிறீர்கள், உங்கள் கணவர் அதற்கு ஆட்சேபனை தெரிவிக்க மாட்டாரா?
பதில்: பேட்டி நன்றாகத் தானே போகிறது, ஏன் இப்படி..? (சிரிக்கிறார்) எனது திருமணம் காதல் திருமணம், அதனால் தான் என்னவோ எனக்கு எல்லா நிலைகளிலும் கணவர் ஆதரவாகவும், துணையாகவும் நிற்கிறார். அவர் மலையாளி, பாலக்காட்டில் படப்பிடிப்பு ஒன்றுக்கு சென்றிருந்தபோது எங்களுக்குள் காதல் மலர்ந்தது. பிறகு திருமணம் முடித்து மைசூரில் செட்டிலாகிவிட்டோம். அவர் எனக்கான சுதந்திரத்தில் தலையிட்டதில்லை. நான் மீண்டும் படப்பிடிப்புகளுக்கு செல்லத் தொடங்கியிருப்பதால் இப்போது கூட எனது மகன்களை அவர் பார்த்துக் கொள்கிறார்.
கேள்வி: உங்கள் சமையலில் கணவருக்கும், மகன்களுக்கும் பிடித்த டிஷ் எது?
பதில்: நான் அசைவ உணவுகளை நன்றாக சமைப்பேன். மீன், இறால் வகை டிஷ்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அதேபோல் மலையாள ஸ்டைல் பிரியாணியும் அருமையாக சமைப்பேன். இது எனது கணவருக்குப் பிடிக்கும். குடும்பத்துடன் எங்கேயாவது சுற்றுலா சென்றோம் என்றால் எனது மகன்கள் ஹோட்டல்களில் சாம்பாரைத் தொட மாட்டார்கள். அந்தளவுக்கு அவர்களுக்கு நான் வைக்கும் சாம்பார் ரொம்பப் பிடிக்கும்.
கேள்வி: நீங்க உளவியல் நிபுணர் எனக் கூறப்படுகிறதே, உண்மையா?
பதில்: ஆமாம், நான் ஒரு சைக்காலஜிஸ்ட். மைசூரில் உளவியல் ரீதியான ஆலோசனை மற்றும் கவுன்சிலிங் கொடுத்து வந்தேன். இப்போது கூட பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களின் உளவி யலை ஆராய்ந்து அது பற்றி பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் விவரித்து வருகிறேன்.
கேள்வி: உங்களுக்கு அரசியல் ஆசையெல்லாம் கிடையாதா?
பதில்: அரசியல் ஆசை என்று கூறுவதை விட அரசியலைக் கண்காணித்து வருகிறேன். தற்போதைய சூழலில் அதில் ஈடுபடுவது குறித்த எண்ணமில்லை. எதிர்காலத்தில் பார்ப்போம்.
கேள்வி: அண்மையில் உங்கள் மனதை உலுக்கிய நிகழ்வு எது?
பதில்: உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் பட்டியலின சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட நிகழ்வு என் மனதை உலுக்கிவிட்டது. இந்தச்செயலில் ஈடுபட்ட கொடூரன்களை உ.பி. அரசு சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அந்தச் சிறுமி உயிருக்குப் போராடி மரணமடைந்த பின்னர் அவரது உடலைப் பெற்றோரிடம் கூட காட்டாமல் தீயூட்டி எரிக்கப்பட்டது ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களைத் தடுக்க கடும் தண்டனைகள் தேவை.