அக்னிபாத் என்று பெயரிடப்பட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் குறுகிய காலத்தில், அதாவது 4 ஆண்டுகள் மட்டுமே பணியாற்றுவதற்கான வேலைவாய்ப்பை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த செவ்வாய் கிழமை தெரிவித்தார். இதனையடுத்து திட்டத்தின் சாதக, பாதகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், மத்திய அரசின் இந்த அக்னிபாத் திட்டத்துக்கு பீகார் மாநிலத்தில் கடும் எதிர்ப்பு மேலெழுந்துள்ளது. இந்த நிலையில், அக்னிபாத் திட்டத்துக்கு கடந்த இரண்டு தினங்களாகவே எதிர்ப்பு தெரிவித்து பீகார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள இளைஞர்கள் தொடங்கிய போராட்டம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் இளைஞர்கள் தீடீரென சாலையில் உள்ள கற்களை எடுத்து பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் மீதும், பின்னர் ரயில் நிலையங்களுக்கு சென்று அங்கு உள்ள ரயில்கள் மீதும் எரிந்துள்ளனர். மேலும், நவாடா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் சாலையில் வாகனங்களின் டயர்களை எரித்ததுடன், பபூவா ரயில் நிலையத்தில் ரயில்பெட்டிகளையும் தீவைத்து எரித்துள்ளனர். இதனால், ரயில் பெட்டி தீயில் எரிந்து நாசமானது. இந்த இக்கட்டான சூழலில் காவல்துறையினர் போராட்டகாரர்களை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்து வருகின்றனர்.