திராவிட முன்னேற்ற கழகத்தின் பேச்சாளரான நாஞ்சில்சம்பத் நேற்று ’Y-பிரிவு பாதுகாப்பில் இருப்பவர், என் உயிரெடுக்க உத்தரவிட்டிருப்பதாக ஊடக நண்பர் என்னிடம் சொன்னார். இதை உலகிற்கு சொல்கிறேன்’ என்று தனது டுவிட்டரில் குறிப்பிட்டு தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழக காவல்துறையை டேக் செய்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள நாஞ்சில் சம்பத் தொடர்ந்து பாஜகவினருக்கு எதிராக பேசி வருவதால் தாம் செல்லும் இடங்களில் எல்லாம் தன்னை தாக்க முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையில், நாஞ்சில்சம்பத் பதிவு குறித்து பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் கூறுகையில், Y-பிரிவு பாதுகாப்பில் தமிழகத்தில் மட்டும் 150 பேருக்குமேல் இருக்கின்றனர். இந்த நிலையில், அவர்களில் யார் என்று கூறாத நாஞ்சில், பரபரப்புக்காக எதையாவது பேசி வருகிறார். அவர் இப்படி நடந்துக்கொள்வது நாகரீகமான செயல் அல்ல என்றும் கூறியுள்ளார். டுவிட்டரிலும் நாஞ்சில் சம்பத்தின் இந்த பதிவுக்கு எதிர்ப்பும் ஆதரவும் எழுந்து வருகிறது. முன்னதாக, தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநரை ஒருமையில் பேசி பரபரப்பை ஏற்படுத்திய நாஞ்சில் சம்பத் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.